செய்திகள்
கைத்தறி நெசவாளர்கள்

ஊரடங்கு உத்தரவால் காஞ்சீபுரத்தில் 30 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் வேலை இன்றி தவிப்பு

Published On 2020-04-03 04:07 GMT   |   Update On 2020-04-03 04:07 GMT
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 30 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் :

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து துணி கடைகள் மற்றும் பட்டு கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூடப்பட்டு விட்டன.

இதன் காரணமாக 30 ஆயிரம் கைத்தறி நெசவாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். எனவே தங்களுக்கு நிவாரணம் வழங்க கோரி காஞ்சீபுரம் மாவட்ட கைத்தறி மற்றும் துணி நூல் துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நெசவாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவுத்தொழிலாளர் சங்கத்தின் சி.ஐ.டி.யு. பிரிவு தலைவர் ஜி.லெட்சுமிபதி, செயலாளர் கே.ஜீவா ஆகியோர் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளை கைத்தறி நெசவாளர்கள் வரவேற்கிறோம். அதற்கு முழுமையான ஒத்துழைப்பும் தருகிறோம். அதே நேரத்தில் காஞ்சீபுரத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 30 ஆயிரம் நெசவாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

சேலைகளை தயாரித்து வழங்கும் துணி கடைகளும், பட்டு விற்பனை செய்யும் அரசின் கூட்டுறவு சங்கங்களும் முழுமையாக மூடப்பட்டிருப்பதால் உற்பத்தி செய்த சேலைகளை யாரிடம் கொண்டு போய் கொடுப்பது என தெரியவில்லை.

நெசவுத்தொழில் முடங்கி போய் இருக்கிறது. எனவே நெசவாளர் குடும்பங்களை காப்பாற்ற மானியமாக ஒவ்வொரு நெசவாளர்களுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News