செய்திகள்
லாரிகளில் குப்பைகளை அள்ளிக்கொண்டு வந்து திட்டக்குடி வெள்ளாற்றில் கொட்டப்படுவதை படத்தில் காணலாம்.

ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய அதிகாரி பணியிடை நீக்கம்

Published On 2019-12-05 02:08 GMT   |   Update On 2019-12-05 02:08 GMT
ஆற்றுவெள்ளத்தில் லாரி, லாரியாக குப்பைகளை கொட்டிய பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.
கடலூர் :

கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்பு பகுதிகள் மற்றும் கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சேகரித்து தனி இடத்தில் வைத்து வருகிறது. இதை மக்கும், மக்காத குப்பைகள் என தனித்தனியாக பிரிக்கும் வகையில் குடோன் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருவதால், இந்த பகுதியில் உள்ள வெள்ளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரை பயன்படுத்தி அதில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் செயலில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

திட்டக்குடியில் அரியலூர் பகுதியை இணைக்கும் வகையில் வெள்ளாற்றின் குறுக்கே உள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில், தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதன் மீது பேரூராட்சிக்கு சொந்தமான லாரிகள், குப்பைகளை அள்ளிக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக பயணிக்கின்றன. நடுப்பகுதியை சென்றதும், அதில் இருந்து அப்படியே வெள்ள நீரில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.

இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலர் இதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் மக்கள் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பிரச்சினை கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

ஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டது உண்மை என்பது தெரியவந்ததையடுத்து, பேரூராட்சி செயல் அதிகாரி குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News