செய்திகள்
கைது

2000, 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது

Published On 2019-11-25 04:35 GMT   |   Update On 2019-11-25 04:35 GMT
அரியலூரில் 2000, 500 ரூபாய் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 23). இவர் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் சாலையோரம் ஓட்டல் நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு தினமும் 2 பேர் வந்து சாப்பிட்டுவிட்டு ரூ.2000, ரூ.500 கொடுத்து மாற்றியுள்ளனர். ராஜா அதனை வாங்கியதுடன், சாப்பிட்டதற்கான ரூபாயை எடுத்துக்கொண்டு மீதி தொகையை கொடுத்து வந்துள்ளார்.

பல நாட்களாக அவர்கள் இதுபோல் வந்து சாப்பிட்டுவிட்டு ரூ.500, ரூ.2000 நோட்டுக்களை கொடுத்து மீதி தொகையை வாங்கி சென்றுள்ளனர். சில நேரங்களில் சில்லரை இல்லாதபோது அருகில் உள்ள கடையில் மாற்றியும் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்றிரவு 2 பேரும் ராஜாவின் கடைக்கு வந்து சாப்பிட்டு விட்டு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளனர். தினமும் ரூ.2 ஆயிரம், ரூ.500-ஐ கொடுத்து மாற்றியதால் அவர்கள் மீது ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து 500 ரூபாய் நோட்டை ஆய்வு செய்தபோது அது கள்ளநோட்டுக்கள் என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ராஜா, உடனடியாக அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை மாவட்டம் மேலூர் கீழவளைவு பகுதியைச் சேர்ந்த ராஜேஸ் (வயது 27), கடலூர் மாவட்டம் முருகன் குடி வெண்கரும்பூர் பகு தியை சேர்ந்த ராஜாங்கம் (41) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு கள்ளநோட்டுக்கள் எப்படி கிடைத்தது? வேறு எங்காவது இதுபோல் புழக்கத்தில் விட்டுள்ளனரா? இதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே போல் அவர்கள் இதுவரை புழக்கத்தில் விட்ட கள்ள ரூபாய் நோட்டின் மதிப்பு எவ்வளவு எனவும் கணக்கிட்டு அதனை கைப்பற்றவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News