செய்திகள்
கைது செய்யப்பட்ட சக்திவேல்.

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திகுத்து- வாலிபர் கைது

Published On 2019-11-18 11:38 GMT   |   Update On 2019-11-18 11:38 GMT
சிதம்பரத்தில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காட்டாண்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் தனலட்சுமி (வயது 18). இவர் சிதம்பரம் அருகே உள்ள வடமூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி சிதம்பரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இதே கடையில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (22) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் ஒரே கடையில் வேலைபார்த்து வந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.

இதையறிந்த கடை உரிமையாளர் அவர்கள் இருவரையும் வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். தனலட்சுமி தனது பாட்டி வீட்டிலேயே தங்கி இருந்தார். சக்திவேல் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு சிப்ஸ் கடையில் வேலை செய்து வந்தார். தனலட்சுமியிடம் செல்போனில் சக்திவேல் பேச முயற்சி செய்தார். ஆனால், தனலட்சுமி செல்போனில் பேசவில்லை.

இதையடுத்து சக்திவேல் நேற்று சிதம்பரத்துக்கு வந்தார். தனலட்சுமி வீட்டுக்கு சென்றார். தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார். ஆனால், அதற்கு தனலட்சுமி மறுப்பு தெரிவித்தார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தான்மறைத்து வைத்திருந்த கத்தியால் தனலட்சுமியை சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடிவந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தலட்சுமியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு தனலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே தப்பி ஓடிய சக்திவேலை பொதுமக்கள் மடக்கி பிடித்து சிதம்பரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News