செய்திகள்
என்ஜின் இல்லாத மோட்டார்சைக்கிள்- சப்-இன்ஸ்பெக்டர் அபராதத்துக்கான ரசீது எழுதிய காட்சி.

என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளி வந்த வாலிபருக்கு அபராதம்

Published On 2019-11-13 03:12 GMT   |   Update On 2019-11-13 03:12 GMT
ஹெல்மெட் அணியவில்லை என்று என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளி வந்த வாலிபருக்கு போலீசார் அபராதம் விதித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சேத்தியாத்தோப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரத்தூரை சேர்ந்த முருகேசன் மகன் தங்கவேல் (வயது 22) என்பவர் என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தார்.

இதை பார்த்த போலீசார், தங்கவேலை மறித்து ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்றனர். அதற்கு அவர் தனது மோட்டார் சைக்கிள் பழுதாகி விட்டதாகவும், அதனால் மெக்கானிக் ஒருவர் வந்து என்ஜினை கழற்றி சென்று விட்டதாகவும், தான் அந்த கடைக்கு மோட்டார் சைக்கிளை தள்ளி செல்வதாகவும் கூறினார்.

இருப்பினும் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என்று சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கவேல், என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்ததற்கு எதற்காக அபராதம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும் அவர் தன்னிடம் பணம் இல்லை என்றும், அதனால் ‘இ-செலான்’ மூலம் ரசீது கொடுங்கள், தான் கோர்ட்டில் அல்லது தபால் நிலையத்துக்கு சென்று அபராதம் செலுத்தி விடுவதாக கூறினார். அதற்கு சக்திவேல், இ-செலான் எந்திரம் இல்லை என்றும், அதனால் ரசீது எழுதி கொடுப்பதாகவும் கூறினார்.

இதனால் தங்கவேலுவுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், தங்கவேலை சமாதானப்படுத்தி அபராதம் செலுத்தி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்லுமாறு கூறினார். பின்னர் அவர் ரூ.100 அபராதம் செலுத்தி விட்டு, மோட்டார் சைக்கிளை தள்ளி சென்றார்.

ஹெல்மெட் அணியவில்லை என்று என்ஜின் இல்லாத மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்த வாலிபருக்கு போலீசார் அபராதம் விதித்த வீடியோ வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News