செய்திகள்
வயல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலை மற்றும் பூஜை பொருட்கள்.

விருத்தாசலம் அருகே விவசாயி வயலில் பழங்கால சாமி சிலை, பூஜை பொருட்கள் கண்டெடுப்பு

Published On 2019-11-12 10:20 GMT   |   Update On 2019-11-12 10:20 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே விவசாயி வயலில் இருந்து இன்று காலை பழங்கால சிலை மற்றும் பூஜை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள பழைய பட்டினம் கிராமத்தில் அவ்வப்போது பழங்கால மக்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழி மற்றும் பல்வேறு பொருட்கள் கிடைத்து வருகின்றன. இதனால் அப்பகுதியில் தொல்லியல் துறையினர் முகாமிட்டு அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலையில் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல் (வயது 75) என்ற விவசாயி தன்னுடைய வயலில் நபார்டு திட்டத்தின் கீழ் வாய்க்கால் வரப்பு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

வயலை சுற்றி வரம்பு அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 4 அடி ஆழத்தில் மண் தோண்டியபோது பழங்கால நடராஜர் சிலை மற்றும் 4 முக்காலி, 4 பூஜை மணி, 2 சொம்பு, ஒரு பானை, 2 தாம்பூலத்தட்டு, 2 தீர்த்தக்குடம், 3 சூலம், 2 தட்டு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.

இதனைப் பார்த்த அப்துல் ஜலீல் மற்றும் விவசாயிகள் விருத்தாசலம் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விருத்தாசலம் தாசில்தார் கவியரசு, வருவாய் ஆய்வாளர் சுமத்ரா, கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் மற்றும் ஆலடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து அப்பகுதியில் கிடைத்த சாமி சிலை மற்றும் பூஜைப் பொருட்களை பார்வையிட்ட தாசில்தார் கவியரசு இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பழமையான சாமி சிலை மற்றும் பூஜைப் பொருட்களாக இருக்கலாம். இது குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து இது எந்த காலத்தைச் சேர்ந்தது? என கண்டறிந்தால்தான் குறிப்பிட்டு கூற முடியும் என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இங்கு கிடைத்த பொருட்களை ஆய்வு செய்து முடித்த பிறகு எங்களிடமே ஒப்படைத்தால் எங்கள் கோவிலில் வைத்து வழிபடுவோம் என தெரிவித்தனர்.

அதற்கு வருவாய்த்துறையினர் தொல்லியல் துறை ஆய்வுக்கு பிறகே அது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர். பழங்கால பொருட்கள் மற்றும் சாமி சிலை கிடைத்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது.

அதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அங்கு திரண்டு வந்து சாமி சிலையை பார்வையிட்டு வழிபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News