செய்திகள்
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

பொது இடங்களில் மது பாட்டில்களை தூக்கி எறிந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2019-11-07 05:34 GMT   |   Update On 2019-11-07 05:34 GMT
நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் மது பாட்டில்களை தூக்கி எறிந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் 55 டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகின்றன. தினசரி 1.50 கோடி வருவாய் வருகிறது. குறைந்தது 20 ஆயிரம் காலி மதுபாட்டில்கள் சேகரிக்கப்படுகிறது.

இதில் 32 கடைகளுக்கு பார் வசதி உள்ளது. 23 கடைகளுக்கு பார் வசதி இல்லை. இந்த கடைகளுக்கு மது அருந்த வரும் ‘குடி’மகன்கள் பார் வசதியில்லாததால் பொது இடங்களில் அமர்ந்து குடித்து விட்டு சாலையோரங்களில் மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர்.

மேலும் சிலர் மது வாங்கி சென்று வனப்பகுதியில் அமர்ந்து குடித்துவிட்டு பாட்டில்களை உடைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் வனப்பகுதி மற்றும் பொது இடங்களில் கிடக்கும் மதுபாட்டில்களால் சுகாதார சீர்கேடு மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

வனப்பகுதிகளில் தூக்கி எறியப்படும் மதுபாட்டில்கள் விலங்குகளில் கால்களில் கீறி காயம் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து சுகாதார சீர்கேட்டை தடுக்க மது குடிப்பவர்கள் இனி பாட்டில்கள் அந்த பகுதிகளில் உள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும். அப்படி செய்யாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், “பொது இடங்களை சுகாதாரமாக வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி காலி மதுபாட்டில்களை பொது இடத்தில் தூக்கி எறிபவர்களுக்கு உள்ளாட்சி விதிகளின் படி, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்,’’ என்றார்.
Tags:    

Similar News