செய்திகள்
கார் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

தேவகோட்டை அருகே விபத்து- சென்னை தனியார் நிறுவன ஊழியர் பலி

Published On 2019-09-10 10:14 IST   |   Update On 2019-09-10 10:14:00 IST
தேவகோட்டை அருகே கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
தேவகோட்டை:

சென்னையைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 48). தனியார் நிறுவன ஊழியரான இவர், தனது நண்பர்கள் பூபதி, சண்முகநாதன், பொன்னையா ஆகியோருடன் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் நடக்கும் திருமணத்தில் பங்கேற்பதற்காக ரெயில் மூலம் நேற்று நள்ளிரவு காரைக்குடிக்கு வந்தனர். பின்னர் அமராவதி புதூரில் உள்ள சண்முகநாதன் வீட்டில் அவர்கள் தங்கினர்.

இன்று காலை சந்தோஷ் குமார் உள்பட 4 பேர் காரில் தேவகோட்டையில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு புறப்பட்டனர். காரை சண்முகநாதன் ஓட்டினார்.

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சடையங்காடு விலக்கில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது நடுரோட்டில் வைக்கப்பட்டிருந்த பேரிகாட் மீது இடிக்காமல் இருக்க காரை திருப்பியதாக தெரிகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலை குப்புற கவிழ்ந்தது.

உள்ளே இருந்தவர்கள் கூக்குரலிட்டனர். உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விபத்தில் சிக்கய 4 பேரை மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சந்தோஷ்குமார் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக ஆராவயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News