செய்திகள்
அத்தி வரதர்

இன்று கடைசி நாள்- அத்திவரதரை விடிய விடிய தரிசித்த பக்தர்கள்

Published On 2019-08-16 11:31 IST   |   Update On 2019-08-16 11:31:00 IST
அத்திவரதரை காண்பதற்காக விடிய விடிய காத்திருந்த பக்தர்களை போலீசார் பகுதி பகுதியாக பிரித்து வைத்து அனுப்பினர்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன விழா கடந்த மாதம் 1-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.

அத்திவரதரை 31 நாட்கள் சயன கோலத்திலும், 17 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அத்திவரதரை தரிசிக்க முடியும் என்பதால் வாழ்நாளில் ஒரு முறையாவது அவரை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர்கள் கூட்டம் தினமும் அலைமோதியது.

அத்திவரதரின் சயன கோல தரிசனம் கடந்த மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைந்தது. சயன கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை 50 லட்சம் பேர் தரிசனம் செய்திருந்தனர்.

கடந்த 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

ஆகம விதிகளின்படி கடைசி நாளான நாளை (சனிக்கிழமை) கண்டிப்பாக அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க வேண்டும் என்பதால் கடைசி நாள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 48 நாட்களாக இருந்த அத்திவரதர் தரிசனம் 47 நாளாக குறைந்தது.

அத்திவரதரை சயன கோலத்தில் தரிசனம் செய்தவர்கள், நின்ற கோலத்திலும் பார்த்து விட ஆர்வம் காட்டினர். இதனால் கடந்த 16 நாட்களும் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சயன கோல தரிசனத்துக்கு திரண்ட பக்தர்களை விட நின்ற கோலத்தில் அத்திவரதரை காண்பதற்கே அதிக கூட்டம் திரண்டது.

இறுதி நாளைக்கு முந்தைய தினமான நேற்றும் அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேற்று 4½ லட்சம் பேர் திரண்டிருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாலை 5 மணிக்கு மேல் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

இதன் பின்னர் பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 5 மணிக்கு பிறகு 3 மணி நேரம் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டு “ஆடி கருட சேவை” நடைபெற்றது.

3 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்ததால் வரிசையில் காத்திருந்த பக்தர்களுடன் புதிதாக சாமி தரிசனம் செய்ய வந்தவர்களும் சேர்ந்து கொண்டனர். இதனால் நேற்று இரவு காஞ்சிபுரம் மக்கள் வெள்ளத்தில் திணறியது.

இரவு 8 மணிக்கு பிறகு பொது தரிசனத்தில் மட்டுமே தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஓரளவுக்கு நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி. தரிசன பாதைகள் மூடப்பட்டு அனைத்து பக்தர்களும் பொது தரிசனம் வழியாக மட்டுமே சென்றதால் வரிசையில் காத்திருந்த பலருக்கு விரைவான சாமி தரிசனம் கிடைத்தது. இரவு 8 மணியில் இருந்து தொடர்ச்சியாக நள்ளிரவு 2 மணி வரையில் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த 6 மணி நேரமும் பக்தர்கள் கூட்டம் கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் அலை மோதியது. இதன் பிறகு நடை சாத்தப்பட்டது.

இன்று அத்திவரதர் தரிசனத்துக்கு கடைசி நாள் என்பதால் இறுதி நாள் தரிசனத்துக்கான ஏற்பாடுகள் நடந்தன.

கடைசி மற்றும் 47-வது நாளான இன்று அத்தி வரதருக்கு ரோஜா மற்றும் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு கடைசி நாள் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


அத்திவரதரை காண்பதற்காக விடிய விடிய காத்திருந்த பக்தர்களை போலீசார் பகுதி பகுதியாக பிரித்து வைத்து அனுப்பினர்.

காஞ்சிபுரம் காந்தி ரோடு, டி.கே.நம்பி சாலை உள்ளிட்ட இடங்களில் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வரிசையில் கூட்டமாக காத்திருந்த பக்தர்கள், தங்களுக்கான தரிசன நேரம் வந்ததும் அத்தி வரதரை ஓடோடி சென்று வழிபட்டனர்.

இன்று அத்திவரதரை தரிசிக்காவிட்டால் இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமே என்று கூறிக்கொண்டே கோவிலுக்குள் பொது தரிசன வரிசையை நோக்கி ஓடினர். அங்கும் கூட்டம் அலைமோதியது. கடும் நெரிசலும் ஏற்பட்டது.

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அத்திவரதர் தரிசனத்திலேயே பக்தர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இன்று காலையில் எப்போதும் இல்லாத வகையில் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.

இதனால் பக்தர்களை கட்டுப்படுத்த போலீசார் கடுமையாக திணறினர். பெண்கள் பலர் கை குழந்தைகளுடன் வந்திருந்தனர். வயது முதிர்ந்த பெரியவர்களும் தரிசனத்துக்காக முண்டியடித்தனர்.

அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி தந்த போது 31 நாட்களில் 50 லட்சம் பேர் தரிசனம் செய்திருந்தனர். நின்ற கோலத்தில் தரிசனம் தந்த கடந்த 16 நாளிலும் 50 லட்சம் பேர் திரண்டு வழிபட்டுள்ளனர்.

47 நாட்களில் அத்திவரதரை 1 கோடி பேர் வரையில் தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் குறுகிய காலமே நின்ற கோலத்தில் காட்சி தந்த அத்திவரதரை அதிகம் பேர் வழிபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் காணிக்கைகளை செலுத்தினார்கள். இதன்மூலம் ரூ.8 கோடி வசூலாகி உள்ளது.

இதுதவிர பக்தர்கள் காணிக்கையாக நகைகளையும் செலுத்தி உள்ளனர்.

கடைசி நாளான இன்றும் நள்ளிரவு வரை அத்தி வரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

இதன் பிறகு அத்திவரதர் தரிசனம் நிறைவு பெற்று விடும். இதனை தொடர்ந்து நடை சாத்தப்பட்டு அத்திவரதரை அனந்தசரஸ் குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கும். நாளை (17-ந் தேதி) அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார்.

இதன் பின்னர் அத்திவரதரை 40 ஆண்டுகள் கழித்தே வெளியில் எடுப்பார்கள். அத்திவரதரை இப்போது தரிசனம் செய்யாதவர்கள் இனி 2059-ம் ஆண்டில்தான் தரிசிக்க முடியும்.

Similar News