செய்திகள்
முருகதாசின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை அவரது மனைவி சுமிதா அடையாளம் காட்டிய காட்சி.

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கடலூரில் கொன்று புதைக்கப்பட்ட மீனவர் உடல் தோண்டி எடுப்பு

Published On 2019-07-04 17:12 GMT   |   Update On 2019-07-04 17:12 GMT
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் கொன்று புதைக்கப்பட்ட மீனவரின் உடல் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:

நாகை மாவட்டம் கூழையாறு கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 45). மீனவர். இவருக்கும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சி.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுமிதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த  பின்பு அவர்கள் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் முருகதாஸ் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். சுமிதா தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்தார். இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டு முருகதாஸ், தனது மைத்துனரின் திருமணத்துக்காக சவுதி அரேபியாவில் இருந்து சிங்காரத்தோப்புக்கு வந்தார். சில நாட்கள் அங்கேயே தங்கி இருந்தார். இந்த நிலையில் முருகதாஸ் திடீரென மாயமானார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள், நண்பர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனாலும் முருகதாஸ் கிடைக்கவில்லை. அவர் வெளிநாடு சென்று விட்டதாக அனைவரும் கருதினர். அதே நேரத்தில் முருகதாசின் மனைவி சுமிதா, முருகதாசின் தம்பி சுமேர் ஆகியோரும் திடீரென மாயமானார்கள்.

3 பேரும் திடீரென்று மாயமானதால் அவர்களின் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில் முருகதாசின் தாயார் பவுனம்மாள் (67) கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது மகன் வெளிநாடு சென்று விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் அவனது பாஸ்போர்ட் வீட்டில் உள்ளது. மேலும் எனது 2-வது மகன் சுமேரும், மருமகள் சுமிதாவும் மாயமாகி விட்டார்கள். இதனால் அவர்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. எனவே காணாமல் போன எனது மகன் முருகதாசை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து காணாமல் போன முருகதாஸ், அவரது தம்பி சுமேர், மனைவி சுமிதா ஆகியோரை கண்டு பிடிக்க கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதில் சுமேரும், சுமிதாவும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

தனிப்படை போலீசார், திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டில் இருந்த 2 பேரையும் பிடித்தனர். அவர்கள் 2 பேரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தியது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கடலூருக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி துருவி துருவி விசாரணை நடத்தினார்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

முருகதாஸ் வெளிநாடு சென்றிருந்தபோது அவரது தம்பி சுமேருக்கும், சுமிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் வீட்டிலேயே உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதனிடையே சவுதி அரேபியாவில் இருந்து சிங்காரத்தோப்புக்கு வந்த முருகதாசிற்கு, மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதனால் அவர், சுமிதாவையும், சுமேரையும் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுமேர், சுமிதா ஆகியோர் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் முருகதாசை கொலை செய்ய திட்டமிட்டனர். அதனை தொடர்ந்து சம்பவத்தன்று முருகதாசை கொன்று வீட்டின் அருகே குழிதோண்டி புதைத்துள்ளனர். பின்பு சுமிதாவும், சுமேரும் கேரளாவுக்கு தப்பி சென்று வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். போலீஸ் விசாரணையில் இது தெரியவந்துள்ளது.

இதையடுத்து கொன்று புதைக்கப்பட்ட முருகதாசின் உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 10 மணிக்கு தாசில்தார் செல்வகுமார், தடயவியல் நிபுணர் தாரா, முதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர், வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் வந்தனர். அவர்களிடம் முருகதாசின் உடல் புதைக்கப்பட்ட இடமான வீட்டின் பின்புறத்தில் உள்ள மாதுளை செடியின் அருகே சுமிதா, சுமேர் ஆகியோர் காண்பித்தனர். அதனை போலீசார் வட்டமிட்டனர். அதன்பினர் பிணத்தை தோண்டும் பணியில் துப்புரவு ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு கூடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

இதையொட்டி அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். காலை 11 மணிக்கு துப்புரவு ஊழியர்கள் குழியை தோண்டி முடித்தனர். முருகதாசின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் துர்நாற்றம் வீசியது. எலும்புக்கூடு மட்டுமே கிடைத்தது.
Tags:    

Similar News