செய்திகள்
கோடியக்கரை முனாங்காடு பகுதியில் இறந்து கரை ஒதுங்கிய ஆலிவ்ரெட்லி ஆமைகள்.

விசை படகில் அடிபட்டு பலியாகும் ஆலிவ்ரெட்லி ஆமைகள்

Published On 2019-06-21 12:20 IST   |   Update On 2019-06-21 12:20:00 IST
கோடியக்கரை முனாங்காடு பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை கடலோரத்தில் ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை பசிபிக் பெருங்கடலிலிருந்து ஆலிவ்ரெட்லி ஆமைகள் முட்டையிட வருகின்றன. கோடியக்கரை பகுதிக்கு வந்து கடற்கரையோரம் மண்ணைத் தோண்டி ஆமைகள் முட்டையிடுகிறது.

நாய்கள் அவற்றை சாப்பிடாமல் பாதுகாக்க, வனத்துறையால் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு கோடியக்கரை, ஆறுகாட்டுத் துறை ஆகிய பகுதிகளில் வனத்துறையின் சார்பில் ஆமை குஞ்சு பொரிப்பகம் அமைத்து அதில் பாதுகாக்கப்படுகிறது.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றை எடுத்து கடலில் விடுகின்றனர். இந்த ஆண்டு 200 ஆமை முட்டைகள் சேகரித்து குஞ்சு பொரித்த பின்பு கடலில் விடப்பட்டது.

நேற்று கோடியக்கரை முனாங்காடு பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஆலிவ்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இந்த ஆமைகள் ஆழ்கடல் பகுதியில் விசை படகில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கியுள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர். அழிந்து வரும் இனமான ஆலிவ்ரெட்லி ஆமைகளை பாதுகாக்க மீனவர்களுக்கு அறிவுரைகள் வழங்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Similar News