செய்திகள்

மோடி அல்ல, அவரது டாடி வந்தாலும் எங்களுக்கு பயமில்லை- தினகரன் ஆவேசம்

Published On 2019-04-07 10:31 GMT   |   Update On 2019-04-07 10:31 GMT
தமிழக மக்களுக்கும் எங்கள் தொண்டர்களுக்கும் மட்டும் தான் நாங்கள் தலை வணங்குவோமே தவிர மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் எங்களுக்கு பயமில்லை என்று தினகரன் ஆவேசமாக பேசியுள்ளார். #dinakaran #pmmodi

கோவில்பட்டி:

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கோவில்பட்டி , நாலாட்டின்புதூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தமிழர்களை வஞ்சிக்கும் மத்தியில் உள்ள மோடி ஆட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள பழனிச்சாமி அண்ட் கம்பெனி ஆட்சி முடிவுக்கு கொண்டுவர, மற்றொரு கூட்டணியாக காங்கிரஸ், தி.மு.க.,கம்யூனிஸ்டு இருக்கின்ற சந்தர்ப்பவாத கூட்டணியை முறியடிக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஆதரிக்க வேண்டும். இன்றைக்கு தேசிய கட்சிகள் தமிழகத்தை புறக்கணிக்கின்றனர். காரணம் இவர்களுக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா வில் தான் இவர்களுக்கு செல்வாக்கு இருப்பதால், அந்த மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கின்றனர். தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணிக்கின்றனர். 2016-ல் மோடி சொன்ன வாக்குறுதியை மற்ற மாநிலங்கள் நம்பி ஏமாந்து போனார்கள். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என கூறியதை நம்பினார்கள். இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை அதிகரித்துள்ளது.

காரணம் மோடியின் சர்வாதிகாரி தன்மை, பண மதிப்பிழப்பு அறிவித்த போது ஏழை மக்கள்தான் சாலையில் நின்றனர், பணக்காரர்கள் யாரும் சாலையில் நிற்கவில்லை. பொய்யான வாக்குறுதி நம்பி பல மாநில மக்கள் ஏமாந்த போதும் தமிழக மக்கள் நீங்கள் மோடியிடம் ஏமாறவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நமக்காக போராடினார், நமது துர்பாக்கியம் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

இன்றைக்கு இந்த அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டோம். மோடியிடம் மண்டியிட்டு வணங்குகிறார்கள், காரணம் மடியில் கனம். ஆனால் எங்களுக்கு எந்த பயமும் இல்லை. நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் உண்மையான பிள்ளைகள், தமிழக மக்களுக்கும் எங்கள் தொண்டர்களுக்கும் மட்டும் தான் நாங்கள் தலை வணங்குவோம். தவிர மோடி அல்ல அவரது டாடி வந்தாலும் எங்களுக்கு பயமில்லை. ஆட்சி அதிகாரத்தை கண்டு அஞ்சுபவர்கள் அல்ல நாங்கள்.

தேர்தல் சின்னம் கொடுக்க மறுத்த போதும் நாங்கள் தயங்கியது கிடையாது, தமிழக மக்கள் தான் பிரதமரை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். மற்றவர்களுக்கு வாக்களித்தால் அவர்கள் பதவி சுகத்திற்காக டெல்லிக்குப் போய் அமர்ந்து விடுவார்கள். எம்.பி.யாக இருக்கும்போது 2ஜி, 3ஜி, 4ஜி இவற்றில் எல்லாம் மாட்டி வந்தவர்கள், அமைச்சர் ஆனால் நிலைமை என்னாகும் என்று பாருங்கள்.

காரணம் 96 இருந்து 2014 வரை மத்தியில் ஏதாவது ஒரு கட்சியுடன் ஆட்சியில் இருந்தது திமுக. ஆனால் தமிழகத்திற்கு எதுவும் செய்யாத காரணத்தினால் தான் 2011-ல் ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுக்கவில்லை. 2014-ல் எம்.பிக்களை கொடுக்கவில்லை, 2016-லும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஜெயலலிதா மறைந்த பிறகு ஆர்.கே. நகரில் டெபாசிட்டை காலி செய்தோம்.

திருவாரூரில் தேர்தலில் போட்டியிட பயந்து தி.மு.க. நீதிமன்ற வாசலில் நின்றது, இன்று கூட்டணிகளை காண்பித்து, சில தொலைக் காட்சிகளை கையில் வைத்துக் கொண்டு ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. துரோக கூட்டணி. தமிழ் நாட்டின் நலனுக்காக உழைக்கக்கூடியவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எங்களை கவனித்துக் கொண்டிருந்தார்கள், எங்களுக்கு சின்னம் எப்படி கிடைக்கும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்த்திருந்தனர், ஜெயலலிதாவின் ஆசியோடு கிடைக்கப்பட்ட சின்னம் தான் பரிசுப்பெட்டகம். போராடி பெற்றுள்ளோம், மக்களுக்காக போராடுவோம், தமிழகத்தின் நலனை மீட்டெடுப்போம், தமிழர் வாழ்வு மலர நாங்கள் உழைத்திடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து கழுகுமலையிலும் டி.டி.வி.தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். #dinakaran #pmmodi 

Tags:    

Similar News