செய்திகள்

செங்கோட்டை அருகே பெண் கவுன்சிலரிடம் ரூ.1.20 லட்சம் பறிமுதல்

Published On 2019-04-01 10:33 IST   |   Update On 2019-04-01 10:33:00 IST
பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் பெண் கவுன்சிலரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #LokSabhaElections2019

செங்கோட்டை:

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பண பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் சார்பாக பறக்கும்படை அமைத்து தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 30 பறக்கும்படையினர் கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

கேரளாவில் வருகிற 23-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதை முன்னிட்டு தமிழக-கேரள எல்லைப் பகுதியிலும் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மட்டும் 9 பறக்கும் படையினர் பல்வேறு பகுதியில் வாகன சோத‌னை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் வேளாண் இணை இயக்குனர் நல்ல முத்து தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள், போலீசார் செங்கோட்டை -பண்பொழி சாலையில் விஸ்வநாதபுரம் விலக்கு மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியே கேரளாவில் இருந்து வேகமாக வந்த கார்களை தடுத்து நிறுத்தினர். கார்களில் காங்கிரஸ் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றை அகற்றுமாறு அதிகாரிகள் கூறினார்கள். இதை தொடர்ந்து அனைத்து கார்களிலும் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது அச்சன் கோவிலை சேர்ந்த சுகந்த பிள்ளை மனைவி மீனா குமாரி என்பவர் வந்த காரிலும் சோதனை நடத்தப்பட்டது. மீனாகுமாரி கேரளாவில் காங்கிரஸ் வார்டு கவுன்சிலராக உள்ளார். சோதனையில் அவரிடம் ரூ.1.20 லட்சம் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டனர். அதற்கு அவர் வங்கி கணக்கு புத்தகத்தை காண்பித்தார். அதில் ரூ.1.20 லட்சத்துக்கான கணக்குகள் இல்லை. இதையடுத்து ரூ.1.20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணங்களை காண்பித்து இந்த பணத்தை பெற்று செல்லுமாறு மீனா குமாரியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த பணம் தாசில்தார் வெங்கடாசலத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தார். கேரள கவுன்சிலரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #LokSabhaElections2019

Similar News