செய்திகள்

அரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் விஏஓ கைது

Published On 2019-03-19 15:22 IST   |   Update On 2019-03-19 15:22:00 IST
அரியலூர் அருகே மாற்றுத்திறனாளியிடம் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ.வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஓலையூர் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் . இவரது மகன் அருள் பாண்டியன் (வயது 25). பட்டதாரியான இவர் 2 கால்களும் செயலிழந்தவர்.

ராமலிங்கம் 2 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். தந்தை பெயரில் உள்ள வீடு, நிலம் போன்றவற்றின் பட்டா, சிட்டா ஆகியவற்றை தனது பெயருக்கு மாற்ற அருள் பாண்டியன் அப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி சுமதியிடம் விண்ணப்பித்தார்.

இந்த நிலையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அருள்பாண்டியனை, வி.ஏ.ஓ. சுமதி சில நாட்கள் அலைக்கழித்து வந்துள்ளார். இது பற்றி கேட்டபோது ரூ.5 ஆயிரம் கொடுத்தால் தான் பட்டா, சிட்டா மாற்றி தருவேன் என்று கூறியுள்ளார். இதற்கு அருள்பாண்டியன் அவ்வளவு பணம் என்னால் தரமுடியாது என்று கூறிய போது, ரூ.1000 தர வேண்டும் என்று சுமதி கேட்டுள்ளார்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அருள் பாண்டியன், இது பற்றி அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து சுமதியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அருள் பாண்டியனிடம் ரசாயனம் தடவிய ரூ.1000 பணத்தை கொடுத்து அனுப்பினர்.

அவர் வி.ஏ.ஓ. அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த சுமதியிடம் பணத்தை கொடுத்தார். அதனை பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமதியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுமதி அங்குள்ள கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
Tags:    

Similar News