செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் விவசாயி தற்கொலை

Published On 2019-02-25 16:06 IST   |   Update On 2019-02-25 16:06:00 IST
மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் டிரஸ்சரி காலனியைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மகன் பாலமுருகன் (வயது 36). இவர்களுக்கு பாச்சலூர் பகுதியில் காபி தோட்டம் உள்ளது. பாலமுருகனுக்கும் திண்டுக்கல் அருகே உள்ள அம்மா பட்டியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (25) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சுபாஷ் கிருஷ்ணன் என்ற 2½ வயது மகன் உள்ளான்.

கிருஷ்ணவேணிக்கும் அம்மா பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். கண்ணன் பெங்களூரில் சொந்தமாக கால்டாக்சி வைத்து ஓட்டி வருகிறார்.கிருஷ்ணவேணி கணவனுடன் கோபித்துக் கொண்டு அடிக்கடி கண்ணனை பார்க்க சென்றுள்ளார்.

3 முறை கண்ணனுடன் தான் வாழ்வேன் என்று கூறி அவருடன் சென்றுள்ளார். பெரியவர்கள் கிருஷ்ணவேணியை அழைத்து பேசி அறிவுரை கூறி கணவனுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் பாலமுருகன் பாச்சலூர் தோட்டத்துக்கு சென்று விட்டார். கிருஷ்ணவேணி தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றுள்ளார். அங்கு மகனை விட்டு விட்டு கள்ளக்காதலன் கண்ணனுடன் ஓட்டம் பிடித்தார். இது குறித்து அறிந்ததும் பாலமுருகன் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

தனது குடும்ப மானம் கெட்டு விட்டதே என்று புலம்பி வந்துள்ளார். மேலும் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவரது பெற்றோர் பாலமுருகனின் அறையை தட்டிய போது திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்த வி‌ஷயம் தெரிய வந்தது. இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பாலமுருகனின் உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News