செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: புதுவை சட்டசபை 14-ந்தேதி கூடுகிறது

Published On 2018-12-07 08:09 GMT   |   Update On 2018-12-07 08:09 GMT
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக புதுவை சட்டப்பேரவை வருகிற 14-ந்தேதி கூட்டப்படுவதாக சட்டசபை செயலாளர் தெரிவித்துள்ளார். #MekedatuDam #PondicherryAssembly
புதுச்சேரி:

கர்நாடக மாநிலம் மேகதாது என்ற பகுதியில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது.

அணை கட்டுவதற்கான ஆரம்ப கட்ட ஆய்வு நடத்த மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் காவிரியில் தண்ணீர் வருவது தடைபடும். இதனால் தமிழகம், புதுவையில் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என தமிழக அரசியல்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

தமிழகத்தில் சிறப்பு சட்டமன்றத்தைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து நேற்றைய தினம் தமிழக சட்டமன்றம் கூடியது.



இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், நீர் வள ஆணைய அனுமதியை திரும்ப பெறக்கோரியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதத்துடன் அனுப்பி வைத்துள்ளார். புதுவையிலும் சிறப்பு சட்டமன்றத்தைக்கூட்ட வேண்டும் என அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் கடிதம் கொடுத்தனர்.

நேற்று முன்தினம் சபாநாயகரை முற்றுகையிட்டு அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் தர்ணா போராட்டமும் நடத்தினர். இதையடுத்து வரும் 14-ந்தேதி சிறப்பு சட்டமன்றத்தைக்கூட்ட அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் புதுவை சட்டப்பேரவை வருகிற 14-ந்தேதி காலை 10 மணிக்கு கூட்டப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த கூட்டத்தில் கர்நாடகாவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. #MekedatuDam #PondicherryAssembly

Tags:    

Similar News