செய்திகள்

வேலூரில் பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேச பெண்ணை தங்க வைத்து விபசாரம்- 7 பேருக்கு வலைவீச்சு

Published On 2018-10-15 17:16 GMT   |   Update On 2018-10-15 17:16 GMT
வேலூரில் வங்கதேச பெண்ணை தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் 7 பேரைதேடி வருகிறார்கள்.

வேலூர்:

வேலூர் சி.எம்.சி. அருகே ஆற்காடு ரோட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பெண் ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்தார். பொதுமக்கள் சந்தேகமடைந்தனர். சிறுமியை மீட்டு பெண்ணை பிடித்து விசாரித்தனர்.

சிறுமியை தாக்கிய பெண் வங்காளதேசத்தை சேர்ந்த முஸ்கான் (வயது 30) என்பதும், இவர் சிறுமிகளை கடத்தி வந்து விபசாரத்தில் ஈடுபட வைக்கும் புரோக்கர் என்பதும் தெரியவந்தது.

விபசார பெண் புரோக்கர் முஸ்கான், வேலூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ‘போக்சோ’ சட்டப் பிரிவில் அப்பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அப்பெண் பரபரப்பு தகவல்களை கூறி உள்ளார்.

அடித்து உதைத்த சிறுமி, முஸ்கானின் உறவினர் மகள். குடும்ப வறுமை காரணமாக தவித்த சிறுமியை வேலையில் சேர்த்து விடுவதாக கூறி வங்காளதேசத்தில் இருந்து அழைத்து வந்துள்ளார்.

பெங்களூரு, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு அழைத்துச்சென்று, பின்னர் வேலூருக்கு அந்த சிறுமியை முஸ்கான் அழைத்துவந்தார். வேலூருக்கு வந்த பிறகு, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சித்தார்.

மேலும் வங்காள தேசத்தில் இருந்து கடல் மார்க்கமாக கள்ளத் தோணியில் இந்தியாவிற்குள் ஊடுருவி சிறுமியை கடத்தி வந்தாக முஸ்கான் வாக்குமூலம் அளித்தார்.

வங்கதேசத்தை சேர்ந்த முஸ்கானா 16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து கொண்டு கடந்த ஆண்டு இந்தியா வந்துள்ளார். ஒருவடமாக பாஸ்போர்ட் இல்லாமல் திருப்பூர், சென்னை, பெங்களூர், வேலூரில் தங்கியிருந்துள்ளார்.

முஸ்கானாவுக்கு கொல்கத்தாவில் உள்ள விபசார கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதில் உள்ள ஒருவர் மூலம் இந்தியா வந்துள்ளார். பெங்களூர், சென்னை, வேலூரில் விபசார கும்பல் உதவியுடன் தங்கியிருந்தார்.

அவருக்கு வேலூர் வாலிபர் உள்பட 7 பேர் உதவியாக இருந்தது தெரியவந்தது. அவரது விபரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். 7 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூரில் உள்ள லாட்ஜிகளில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஸ்போர்ட் இல்லாமல் வெளிநாட்டினர் தங்க அனுமதிக்க கூடாது. அப்படி வந்தவர்கள் குறித்து உடனே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென லாட்ஜ் உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News