சிவகங்கை கோர்ட்டில் நீதிபதி இருக்கையில் அரிவாளுடன் உட்கார்ந்து வாலிபர்
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் நேற்று வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டிருந்தன.
அப்போது 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கோர்ட்டு வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இருந்த சிறிய அரிவாளை எடுத்துக் கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டும் தொனியில் பேசினார். மேலும் சிலரை விரட்டிச் சென்றுள்ளார்.
தொடர்ந்து தலைமை குற்றவியல் நீதிபதி அறைக்குச் சென்ற அந்த வாலிபர் நீதிபதி இருக்கையில் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த சிவகங்கை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வாலிபரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நீதிபதி இருக்கையில் அமர்ந்து ரகளை செய்தது சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணா நகரைச் சேர்ந்த முனியசாமி (வயது 24) என தெரிய வந்தது.
இவர் ஒரு வழக்கு தொடர்பாக சிவகங்கை மாவட்ட கோர்ட்டுக்கு கையெழுத்திட வந்துள்ளார். அப்போது தான் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
முனியசாமிக்கு மனநல பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகிறார். #Judge #court