செய்திகள்

இந்திய அளவில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது- மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

Published On 2018-09-30 16:28 GMT   |   Update On 2018-09-30 16:28 GMT
இந்திய அளவில் தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசினார். #mylswamyannadurai

ஈரோடு:

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் ஆண்டு தோறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் ஊக்குவிப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இருந்து இளம் விஞ்ஞானிகளாக தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 150 மாணவ-மாணவிகளுக்கு ‘இன்ஸ்பையர்’ எனப்படும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் திறன் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வருகிற அக்டோபர் 3-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமின் தொடக்க விழா நடந்தது.

விழாவுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை தாங்கினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரி ஆறுமுகம், நந்தா கல்வி அறக்கட்டளை செயலாளர் நந்தகுமார் பிரதீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அறிவியல் தொழில்நுட்பத்துறையில் வாய்ப்புகளும், சவால்களும் என்ற தலைப்பில் பேசினார்.

அடுத்த மாதம் புதுடெல்லியில் ரஷ்ய நாட்டை சேர்ந்த, தேர்ந்து எடுக்கப்பட்ட 20 மாணவ-மாணவிகளுடன் மனித வாழ்நாளை அதிகரிப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக, பரீட்சார்த்த முறையில் உங்களோடு கலந்துரையாட இருக்கிறேன்.

தற்போது தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. போர் தொடர்பான அச்சம் இருந்தாலும், போர்கள் நடைபெறாமல் தவிர்க்கும் நிலை உள்ளது. பசி இருந்தாலும் பட்டினியால் மரணம் என்பது இல்லை. எனவே இந்த 3 முக்கிய காரணிகளும் மனித வாழ்நாளை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

விழாவில் அவரது மனைவி வசந்தி அண்ணாதுரை, சென்னை பேராசிரியர் சுரேஷ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் கே.அப்துல் நன்றி கூறினார். #mylswamyannadurai

Tags:    

Similar News