செய்திகள்

தீண்டாமை கொடுமை எதிரொலி - அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர்

Published On 2018-09-29 05:19 GMT   |   Update On 2018-09-29 05:19 GMT
ஆண்டிப்பட்டி அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு மற்ற சமூகத்தினர் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர். #AnganwadiCenter

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூரில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இதில் திம்மரச நாயக்கனூர், பிள்ளை முகம்பட்டி, இந்திராநகர் ஆகிய பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர்.

50 குழந்தைகளுக்கு ஒரு அங்கன்வாடி மையம் என்ற அடிப்படையில் இதனை 2 ஆக பிரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து பிள்ளை முகம்பட்டியில் புதிய அங்கன்வாடி மையம் கடந்த 2015-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

இந்த மையத்தில் பிள்ளை முகம்பட்டியைச் சேர்ந்த பாலகுரு என்பவர் அங்கன்வாடி பணியாளராகவும், பொம்மிநாயக்கன் பட்டியைச் சேர்ந்த சுப்பு லெட்சுமி சமையலராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மையத்தில் மொத்தம் 54 குழந்தைகள் என்ற கணக்கில் 20-க்கும் குறைந்த அளவு குழந்தைகளே பயன்பெற்று வருகின்றனர்.

தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பிள்ளை முகம்பட்டியில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையத்துக்கு இந்திராநகர் பகுதியில் வசிக்கும் மற்ற சமுதாயத்தினர் தங்கள் குழந்தைகளை அனுப்ப மறுத்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மாவு, முட்டை ஆகிய பொருட்களை மட்டும் பெற்றுக் கொண்டு கல்வி பயில அனுப்புவதில்லை என்று அங்கன்வாடி பணியாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நலனுக்காக அரசு நிதியை செலவழித்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்துக்கு இந்திரா நகர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களும் தங்கள் குழந்தைகளை அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இம்மையத்துக்கு மின்சார வசதி, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தேனி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாமரைச் செல்வியிடம் கேட்டபோது பிள்ளைமுகம் பட்டி அங்கன்வாடி மையத்தில் தீண்டாமை கொடுமை நடப்பது குறித்து எவ்வித புகாரும் வரவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #AnganwadiCenter

Tags:    

Similar News