செய்திகள்
கைதான கள்ளநோட்டு கும்பலை படத்தில் காணலாம்.

பள்ளிபாளையத்தில் 100 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் - பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2018-09-22 03:45 GMT   |   Update On 2018-09-22 03:45 GMT
பள்ளிபாளையத்தில் 100 ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். #FakeCurrency
பள்ளிபாளையம்:

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற ஒரு பெண்ணை நேற்று முன்தினம் ஈரோடு மாவட்ட தனிப்படை போலீசார் பிடித்தனர். விசாரணையில், அந்த பெண் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் கண்டிபுதூர் சின்னவீதியைச் சேர்ந்த பானு என்ற நாகூர் பானு (வயது 33) என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் பள்ளிபாளையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர் கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ரமேஷ் (28) என்பவர் பள்ளிபாளையம் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

திருச்செங்கோடு தாலுகா பாப்பம்பாளையத்தைச் சேர்ந்த அருணாசலம் மகன் சுகுமார் (43) என்பவர் எனக்கு எலக்ட்ரிக்கல் வேலை செய்ததற்காக ரூ.80 ஆயிரம் தராமல் நிறுத்தி வைத்திருந்தார். அதனை கேட்பதற்காக நான் சென்றேன். அப்போது அவர் வீட்டில் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. நான் பணத்தை கேட்டபோது அந்த கள்ளநோட்டில் இருந்து எடுத்து தர முயன்றார். அப்போது நான் கள்ளநோட்டு வேண்டாம் என்று கூறிவிட்டு வந்து விட்டேன்.

இவ்வாறு அவர் அதில் கூறி இருந்தார்.

இதையடுத்து போலீசார் பாப்பம்பாளையத்துக்கு விரைந்து சென்றனர். சுகுமார் வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு கள்ளநோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம், கம்ப்யூட்டர், ஸ்கேன் கருவி, 2,000 ரூபாய் கள்ளநோட்டு அச்சடிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத்தாள் ஆகியவற்றையும் அங்கிருந்து போலீசார் பறிமுதல் செய்தார்கள்.

இதையடுத்து பானு, சுகுமார் ஆகியோரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கள்ளநோட்டு அச்சடிக்க உதவிய பள்ளிபாளையம் ஆலாம்பாளையம் பொன்னிநகரைச் சேர்ந்த பழனியப்பன் மகன் ரமேஷ் (31), கள்ளநோட்டுக்கு கம்ப்யூட்டரில் வடிவமைத்த பள்ளிபாளையம் ஆவாரங்காடு காந்திபுரம் முதல்தெருவைச் சேர்ந்த சக்தி என்ற சந்திரசேகரன் ஆகியோரையும் கைது செய்தனர். மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைதான 4 பேரையும் திருச்செங்கோடு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  #FakeCurrency
Tags:    

Similar News