செய்திகள்

18 குட்கா மூட்டைகள் பறிமுதல் - 2 சொகுசு பஸ் டிரைவர்கள் கைது

Published On 2018-08-05 05:03 GMT   |   Update On 2018-08-05 05:03 GMT
கர்நாடக சொகுசு பஸ்களில் கடத்தி சென்ற 18 குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் பஸ் டிரைவர்கள் 2 பேரை கைது செய்தனர்.
சேலம்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. இதை தடுக்க போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு செல்லும் சொகுசு பஸ்களில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கருப்பூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட 2 சொகுசு பஸ்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, ஒரு சொகுசு பஸ்சில் பொருட்கள் வைக்கும் அறையில் 6 மூட்டைகளும் மற்றொரு சொகுசு பஸ்சில் 12 மூட்டைகளும் இருந்தது.

இந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த 18 மூட்டைகளும் பறிமுதல் செய்து, சூரமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2½ லட்சம் இருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த பஸ்களை ஓட்டி வந்த டிரைவர்கள் திருச்சியை சேர்ந்த கண்ணன், பெருந்துறையை சேர்ந்த வெங்கடேஷ் ஆகிய இருவரிடமும் கோவைக்கு சென்று பயணிகளை இறக்கி விட்டு விட்டு, திரும்ப சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அதன்படி 2 டிரைவர்களும் கோவையில் பயணிகளை இறக்கி விட்டு, சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள்.

இதையடுத்து அவர்களிடம் குட்காவை அனுப்பி வைத்தது யார்?, இதை எங்கு கொண்டு செல்ல முயன்றீர்கள்? இதற்கு யார்? யார்? உடந்தை என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அவர்கள் போலீசாரிடம், குட்கா கடத்தல் சம்பவம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்ளை கைது செய்தவதற்கான நடவடிக்கையில் போலீசார் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

ஆஜரான 2 சொகுசு பஸ் டிரைவர்களிடம் விசாரணை முடிந்ததும், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து கண்ணன், வெங்கடேஷ் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News