செய்திகள்

திருவேற்காடு கோவில் அருகே 250 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

Published On 2018-07-26 11:35 IST   |   Update On 2018-07-26 11:35:00 IST
திருவேற்காடு கோவில் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 250 கடைகளை அதிகாரிகள் ஜேசிபி எந்திரங்கள் மூலம் இன்று காலை அகற்றினர். #Tiruverkadutemple
பூந்தமல்லி:

திருவேற்காட்டில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.

தற்போது ஆடித் திருவிழாவையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதனால் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவில் அருகே உள்ள சன்னதி தெருவில் பூக்கடை, ஓட்டல்கள், துணிக்கடை பூஜை பொருட்கள் விற்பனை கடை உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன.

சில கடைகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. பக்தர்களும் அவதி அடைந்து வந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அம்பத்தூர் கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் 5 ஜே.சி.பி. எந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கடைகளை அதிரடியாக அகற்றினர். பாதுகாப்புக்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் மற்றும் போலீசாரை வியாபாரிகள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில வியாபாரிகள் கடைக்குள் அமர்ந்து வெளியே வர மறுத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர். இதைத் தொடர்ந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

கடைகள் இடிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சுமார் 50-க்கு மேற்பட்ட வியாபாரிகள் திடீரென கோவில் கதவை இழுத்து பூட்டினர். அப்போது கோவிலுக்குள் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இருந்தனர். கோவில் பூட்டப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறியடித்து வெளியே வர முயன்றனர். இதனால் கோவிலுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனை அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் கோவில் கதவை திறந்து பக்தர்களை வெளியே வரச் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பெண் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் கோவில் அருகே உள்ள நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் அலுவலகம் முன்பு அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். அவர்களிடம் அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “அதிகாரிகள் எந்த முன் அறிவிப்பும் இன்றி கடைகளை அகற்றினர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் நடவடிக்கையை கண்டித்து தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம்” என்றனர்.
Tags:    

Similar News