செய்திகள்

குரங்கணி தீ விபத்து - விசாரணை அறிக்கை இன்னும் 2 மாதத்தில் அரசிடம் சமர்ப்பிப்பு

Published On 2018-04-04 11:15 IST   |   Update On 2018-04-04 11:15:00 IST
குரங்கணி மலை தீ விபத்து குறித்த விசாரணை அறிக்கையை இன்னும் 2 மாதத்தில் அரசிடம் சமர்ப்பிப்போம் என்று அரசு முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கூறினார்.
ஈரோடு:

தேனி மாவட்டம் குரங்கணி மலை தீ விபத்தில் 22 சுற்றுலா பயணிகள் பலியாகினர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் இதில் அடங்குவர்.

இந்த தீ விபத்து குறித்து அரசு முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா அரசு சார்பில் விசாரணை நடத்தி வருகிறார். குரங்கணி மலை பகுதியில் விசாரணை மேற்கொண்ட அதுல்ய மிஸ்ரா இன்று ஈரோட்டுக்கு வந்தார்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அவர் குரங்கணி மலை தீவிபத்து குறித்து பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்துகள் கேட்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-



குரங்கணி மலை பகுதிக்கு பலியானவர்கள் எப்படி சென்றார்கள்? எப்படி அனுமதி வாங்கினார்கள்? என்று விசாரணை நடந்து வருகிறது.

கடந்த 21 மற்றும் 22-ந் தேதி தீ விபத்து நடந்த குரங்கணி மலை பகுதியில் முழுமையாக ஆய்வு செய்தோம். டிரக்கிங்கில் என்னென்ன தவறு செய்தார்கள்? எனவும் ஆராய்ந்தோம்.

தீ விபத்தில் தப்பியவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளோம். ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்த நேகா, சுவேதா ஆகியோரை விசாரணைக்கு அழைத்தோம். ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை.

தேவைப்பட்டால் நாங்கள் அவர்களின் வீட்டுக்கு சென்று விசாரணை செய்வோம். குரங்கணி மலை தீ விபத்து பற்றி ஏற்கனவே கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. நாங்களும் தனியாக விசாரணை நடத்தி வருகிறோம்.

தீ விபத்து நடந்தால் அந்த பகுதியில் வெப்பம், ஆக்சிஜன், எரிபொருள் இருந்திருக்கும். தீ விபத்து நடந்த குரங்கணி மலையில் வெப்பம், ஆக்சிஜன் இருந்துள்ளது. இதனால் தீப்பொறி ஏற்பட்டு விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இன்று ஈரோட்டில் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறோம். அடுத்து பொள்ளாச்சி செல்கிறோம். இன்னும் 2 மாதத்தில் எங்கள் விசாரணை முடிந்து விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிப்போம்.

இவ்வாறு முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா கூறினார்.  #KuranganiForestFire

Similar News