செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை பாதிப்பு குறித்து கலெக்டர் விசாரணை - அமைச்சர் கருப்பணன் தகவல்

Published On 2018-03-28 08:02 GMT   |   Update On 2018-03-28 08:02 GMT
ஸ்டெர்லைட்டால் என்ன பாதிப்பு என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், அரசு செயலர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்று தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறினார். #BanSterlite #TalkAboutSterlite
ஈரோடு:

ஈரோட்டில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நியூட்ரினோ, ஓ.என்.ஜி.சி. திட்டங்களுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது. அந்த திட்டங்கள் அமையும் இடங்களில் உள்ள மக்களிடம் இது பற்றி கருத்து கேட்க குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த குழு அறிக்கை தயார் செய்து வழங்கும். அதன் அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும்.



ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒரு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஸ்டெர்லைட்டால் என்ன பாதிப்பு? என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், அரசு செயலர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் ரூ. 100 கோடி நிதி வழங்கி உள்ளனர். அந்த நிதி வட்டியுடன் ரூ. 135 கோடி உள்ளது. அதன் மூலம் மக்களுக்கு தேவையானவற்றை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது பற்றி அந்த மாவட்ட கலெக்டர் முடிவு செய்வார்.

தமிழகத்தில் காற்று மாசுபாடு இல்லை. சென்னை கோயம்பேட்டில் மட்டும் மாசுபாடு ஏற்படுகிறது. அதுவும் சிறிது நேரத்தில் சரியாகிவிடுகிறது.

ஆலைகளில் கழிவு நீர் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தற்போது 68 ஆலைகள் புகார் அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன. மேலும் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #tamilnews
Tags:    

Similar News