செய்திகள்

காரைக்குடியில் இன்று கோவில்-தேவாலயம் இடித்து அகற்றம்

Published On 2018-02-05 22:21 IST   |   Update On 2018-02-05 22:21:00 IST
அரசு இடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கோவில் மற்றும் தேவாலயம் இன்று இடித்து அகற்றப்பட்டது.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ. காலனியில் நாகாத்தம்மன் கோவில், தேவாலயம் உள்ளன. இங்கு தினமும் பலர் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோவில் மற்றும் தேவாலயம் இருக்கும் இடம், அரசுக்கு சொந்தமான புஞ்சை நிலம் என்றும், அனுமதியின்றி கோவில், தேவாலயம் கட்டப்பட்டு உள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் புகார் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கோவில் மற்றும் தேவாலயத்தை அகற்ற உத்தரவிட்டது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. இருப்பினும் கோவில் மற்றும் தேவாலயம் அகற்றப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து இன்று காலை காரைக்குடி வட்டாட்சியர் மகேஷ்வரன், போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் வருவாய்த்துறையினரும் போலீசாரும் என்.ஜி.ஓ. காலனி சென்றனர். அவர்கள் கோர்ட்டு உத்தரவை காட்டி கோவில் மற்றும் தேவாலயத்தை புல்டோசர் மூலம் இடித்து அகற்றினர்.

முன்னதாக கோவிலில் இருந்த அம்மன் மற்றும் சுவாமி சிலைகள், தேவாலயத்தில் இருந்த ஏசு, மாதா சிலைகள் இருக்கைகள் போன்றவை எடுத்து வெளியே வைக்கப்பட்டன.

கோவில் மற்றும் தேவாலயம் இடிப்பு காரணமாக அந்தப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது. #tamilnews

Similar News