செய்திகள்

இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2017-12-29 09:51 GMT   |   Update On 2017-12-29 09:51 GMT
ஜெயலலிதா சொன்னது போல் இந்த ஆட்சி இன்னும் மூன்றரை ஆண்டுகள் சிறப்பாக செயல்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்க ஆலோசனை கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது.

கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கூட்டுறவு சங்க பதிவாளர் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் பயிர் காப்பீடு வழங்கவில்லை என தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்தியாவிலே அதிக பயிர் காப்பீடு வழங்கியது தமிழக அரசுதான். ரூ. 2,558 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற மாநிலங்களில் ரூ. 700 கோடியை தாண்டவில்லை.

இதற்காக மத்திய அரசு தமிழக அரசை பாராட்டி உள்ளது. ஜெயலலிதா ஆட்சியை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எந்த ரேசன் கடையிலும் எந்த பொருளும் இல்லை என்ற நிலை இருக்க கூடாது. அனைவருக்கும் எல்லா பொருட்களும் கிடைக்க வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் ரேசன் கடை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பொங்கல் தொகுப்பு பொருட்களை இடர்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாமானியர்களும் முதல்-அமைச்சரை சந்திக்கும் ஆட்சி இந்தியாவிலே தமிழகத்தில் தான் நடக்கிறது. இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். அவரிடம் இன்னும் 3 மாதத்தில் ஆட்சியை கவிழ்த்து விடுவதாக டி.டி.வி. தினகரன் கூறி உள்ளாரே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்த ஆட்சி இன்னும் மூன்றரை ஆண்டுகள் சிறப்பாக செயல்படும். ஜெயலலிதா சொன்னபடி இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சி நடக்கும். இதற்கு தமிழக அரசின் செயல்பாடே சான்று என்றார்.

Tags:    

Similar News