சத்தியமங்கலத்தில் என்ஜினீயரிங் மாணவர் விஷம் குடித்து தற்கொலை
சத்தியமங்கலம்:
கடலூர் மாவட்டம், நெய்வேலி, பிளாக் 2, என்.கே.கே.பிள்ளை தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவரது மகன் அய்யப்பன் (19).
அய்யப்பன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார்.
இதற்காக அய்யப்பன் சத்தியமங்கலம், கொங்கு நகரில் உள்ள ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார்.
கண்ணன் தன் மகன் அய்யப்பனுடன் தினமும் போனில் பேசுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களாக கண்ணன் தனது மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன் பக்கத்து வீட்டில் வசிக்கும் அபிராமி என்பவருக்கு போனில் தொடர்பு கொண்டு அய்யப்பன் வீட்டை பார்க்க சொன்னார். அதன்பேரில் அவர் சென்று பார்த்தார்.
வீடு உள்புறமாக பூட்டி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அபிராமி வீட்டின் சமையல் அறையில் உள்ள ஜன்னலை உடைத்து பார்த்துள்ளார். அப்போது அய்யப்பன் குளியல் அறை அருகில் இறந்த நிலையில் கிடப்பதாக கூறினார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கண்ணன் சத்தியங்கலத்துக்கு விரைந்து வந்தார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அய்யப்பன் விஷம் குடித்து இறந்தது தெரியவந்தது. மேலும் இடது கை மணிக்கட்டில் கத்தியால் அறுத்துக் கொண்ட காயங்களும் இருந்தது. அவர் உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் இருந்ததால் அவர் இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அவர் எந்த காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. நடந்த முடிந்த தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியதால்தான் தற்கொலை கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் உண்மையான காரணம் தெரியவில்லை.
இது குறித்து சத்தியங்கலம் போலீசாக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோனைக்காக சத்தியங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.