செய்திகள்

காளிங்கராயன் அணைக்கட்டில் குளித்த ஆஸ்பத்திரி ஊழியர்- நண்பர் தண்ணீரில் மூழ்கி பலி

Published On 2017-10-12 22:37 IST   |   Update On 2017-10-12 22:37:00 IST
காளிங்கராயன் அணைக்கட்டில் குளித்த ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ஊழியர் மற்றும் நண்பர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு:

சேலம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் டான் பிரவீன் (வயது 32). இவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பெயர் கிருத்திகா (31). 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவரது நண்பர் சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த புஷ்பராஜன் (33). இவர் சேலத்தில் உள்ள ஒரு பிஸ்கட் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று புஷ்பராஜன் சேலத்தில் இருந்து ஈரோடு வந்தார். பிறகு இவரும் இவரது நண்பர் டான் பிரவீனும் டெக்ஸ்வேலிக்கு சென்று ஜவுளி வாங்கி கொண்டனர்.

பிறகு நண்பர்கள் இருவரும் காளிங்கராயன் அணைக்கட்டுக்கு வந்தனர். அங்கு குளித்தனர். இருவருக்கும் நீச்சல் தெரியாது என தெரிகிறது.

இவர்கள் குளித்து கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி விட்டார்கள். மாயமாவதற்கு முன் டான் பிரவீன் மனைவி தன் கணவருக்கு போன் செய்து ரொம்ப நேரம் ஆகி விட்டதே.. எங்கே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு டான் பிரவீன் “அணைக்கட்டில் குளித்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரம் வீட்டுக்கு வந்து விடுகிறேன்” என்று கூறி உள்ளார். ஆனால் பேசி நீண்ட நேரம் ஆனதால் அவரது மனைவி மீண்டும் போனில் தொடர்பு கொண்ட போது போன் “சுவிட்ச் ஆப்” ஆகி இருந்தது.

இந்த நிலையில் அணைக் கட்டில் குளித்து மாயமானவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்களும், தீயணைப்பு வீரர்களும் தேடினர். இதற்கிடையே அவர்கள் குளித்த இடத்தில் இருந்து 1கி.மீட்டர் தூரத்தில் புஷ்பராஜன் உடல் கிடந்தது கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது. அவரது நண்பர் டான் பிரவீனை தொடர்ந்து தேடி வருகிறார்கள். அவரும் அணைகட்டில் மூழ்கி பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இது குறித்து சித்தோடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News