செய்திகள்

என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் சொகுசு கப்பல் வாங்கியதில் ஊழல்: நாராயணசாமி பேட்டி

Published On 2017-09-30 12:41 GMT   |   Update On 2017-09-30 12:41 GMT
கடந்த 2015-ம் ஆண்டு என்ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் 2 சொகுசு படகுகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக முதல்- அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி:

புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 2 நாட்களுக்கு முன்பு பா.ஜனதாவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா தேசிய கூட்டணி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 3 ஆண்டுகாலத்தில் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

பண மதிப்பிழப்பை அரசு அமல்படுத்தியபோது காங்கிரஸ் கட்சி சார்பில் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் என கூறினோம். அதோடு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 2 சதவீதம் பொருளாதார இழப்பு ஏற்படும் என பாராளுமன்றத்திலும் பேசினார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 16 ஆயிரம் கோடி பணத்தை தவிர மீதமுள்ள பணம் அனைத்தும் ரிசர்வ் வங்கி கணக்கிற்கு வந்து விட்டது.

புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500 நோட்டு அச்சடித்ததில் அரசுக்கு ரூ.21 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மத்திய அரசுக்கு எந்த பலனும் ஏற்படவில்லை.

பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளது. பழைய கணக்குப்படி பொருளாதார வீழ்ச்சி 3.7 சதவீதமாக குறைந்துள்ளது.

இதேபோல அவசர, அவசரமாக சரக்கு சேவை வரியை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்துள்ளது. பண வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 3 ஆண்டுகளாகும். விவசாயிகள், தொழிலாளர்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 2 சதவீத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு ரூ.3 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். இல்லாவிட்டால் அனைத்து மாநிலங்களும் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகும்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தேன். அங்கு மத்திய மந்திரி ராம் விலாஸ்பாஸ்வானை நானும், அமைச்சர் கந்தசாமி, டெல்லி பிரதிநிதி ஜான்குமாரும் சந்தித்தோம்.

அப்போது வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இலவச அரிசி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஓராண்டுக்கு புதுவைக்கு அரிசி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.

3 மாதங்களுக்கு முதலில் இலவச அரிசி வழங்குவதாகவும், எஞ்சிய 9 மாதங்களுக்கு தவணை முறையில் அரிசி வழங்குவதாகவும் மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார்.

மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் புதுவையில் 27 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு அரிசிக்காக பணம் ஒதுக்கி வருகிறது. பிற மாநிலங்களில் ரூ.29 தருகின்றனர்.

ஆனால், புதுவையில் ரூ.26 மட்டுமே தரப்படுகிறது. இதையும் உயர்த்தி வழங்கும்படி கோரியுள்ளோம். இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுலாத்துறை மந்திரியை சந்தித்தோம். மத்திய அரசின் கடலோர பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதுவை கடற்கரையில் செயற்கை மணல்பரப்பு உருவாக்கப்படும் திட்டம் குறித்து தெரிவித்தோம். இதன்மூலம் மணல் பரப்பு உருவாகியுள்ளதையும் தெரிவித்தோம்.

தற்போது வடக்கு பகுதியில் மணல் பரப்பு உருவாகுவது போல தெற்கு பகுதியிலும் உருவாக்க அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுள்ளோம். இதற்காக ரூ.356 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிப்பதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர் விசாரணை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். அரசு துறைகளில் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அமைச்சர்கள், முதல்- அமைச்சருக்கு உள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு என்ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் 2 சொகுசுபடகுகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதற்காக அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் ஒப்பந்தப்புள்ளியை போடாததால் இது ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அங்கீகரிக்கப்பட்ட இணையதளம் மூலம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு 2 படகுகள் வாங்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சி ஏற்பட்ட பிறகு இதில் விதிமீறல்கள் ஏற்பட்டிருப்பதாக மத்திய விஜிலென்சிற்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில் மத்திய விஜிலென்ஸ் புதுவை அரசுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட புதுவை அரசுக்கு தெரியாமல் சில வி‌ஷயங்கள் நடந்து கொண்டே வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம், புதுவை யூனியன் பிரதேச சட்டத்தையும் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இதை நிர்வாகத்தில் உள்ள ஒரு சிலர் கடைபிடிப்பதில்லை.

புதுவையில் சரக்கு மற்றும் சேவை வரிக்குள் 98 சதவீத வியாபாரிகள் வந்துள்ளனர். இந்த வியாபாரிகளை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினேன். வரி விதிப்பில் சில குழப்பங்கள் உள்ளது.

இதை தீர்க்க 6 மாதகாலத்திற்கும் மேலாகும். வரியால் நமக்கு இழப்பீடும் ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கல் பொருட்கள் புதுவையில் 5 சதவீத வரியில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது பிற மாநிலங்களுடன் இந்த வரி சமமாகிவிட்டது.

இதேபோல பல பொருட்களின் விற்பனை குறைந்து இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்லை தருவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதை சட்டத்திலும் கொண்டுவந்துள்ளோம்.

இழப்பை மாதந்தோறும் வழங்க வலியுறுத்தி வருகிறோம். டெங்கு காய்ச்சல் தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட்டம் நடத்தினோம்.

அதில் டெங்கு காய்ச் சலை கட்டுப்படுத்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. கொசு மருந்து அடிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News