செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2017-09-27 09:02 IST   |   Update On 2017-09-27 09:02:00 IST
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் பிடிபட்டனர்.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த முகமது மொய்தீன் (வயது 35) என்பவர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் இருந்தன. அவற்றை சோதித்தபோது 1 கிலோ எடையுள்ள தங்கத்தை கம்பிகளாக மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்டப்பராஷனில் (29) என்பவர் வந்தார். சந்தேகத்தின் பேரில் அவரை சோதனை செய்தபோது, அவர் தனது ஆசனவாய் பகுதியில் மறைத்து வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றினார்கள்.

மேலும் அதே விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த அப்துல்சமத் (42) என்பவர், சூட்கேசில் மறைத்து வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கத்தையும், சென்னையைச் சேர்ந்த அப்துல் பர்வேஷ் (25) என்பவர் தனது ஆசனவாய் பகுதியில் மறைத்து கடத்தி வந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 250 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் முகமது மொய்தீனை கைது செய்தனர். மற்றவர்களை பிடித்து விசாரித்தும் வருகின்றனர்.

Similar News