செய்திகள்

நெல்லை சந்திப்பு காப்பகத்தில் இருந்து 2 இளம்பெண்கள் தப்பி ஓட்டம்

Published On 2017-09-12 10:12 GMT   |   Update On 2017-09-12 10:12 GMT
நெல்லை சந்திப்பு காப்பகத்தில் இருந்து 2 இளம்பெண்கள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை:

நெல்லை சந்திப்பில் ‘சரணாலயம்’ என்ற பெயரில் காப்பகம் செயல்பட்டு வருகிறது. பெற்றோர் மற்றும் உறவினர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி மீட்கப்படும் சிறுவர்- சிறுமிகள், போலீஸ் வழக்குகளில் சிக்கும் சிறுவர்-சிறுமிகள் மற்றும் பெண்கள் சுமார் 100 பேர் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்.

அவர்களில் போலீஸ் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் 15 பேர் உள்ளனர். அவர்களில் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த மாலா, கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த சுதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகியோர் அடங்குவர். 17 வயது மதிக்கத்தக்க இவர்கள் காதல் விவகாரம் தொடர்பாக மீட்கப்பட்டு பாதுகாப்புக்காக சரணாலயத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இரவில் தூங்க செல்லும் முன் காப்பகத்தில் இருப்பவர்கள் பற்றி கணக்கெடுக்கப்பட்டது. அப்போது மாலா, சுதா ஆகிய இருவரையும் காணவில்லை. அவர்கள் இருவரும் காப்பகத்தின் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து தப்பியதாக தெரிகிறது. இதுகுறித்து உடனடியாக காப்பக நிர்வாகிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மேலும் குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்துக்கும், சந்திப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளும், போலீசாரும் வந்து விசாரணை நடத்தினர். இளம்பெண்கள் 2 பேரும் எங்கு சென்றனர்? என்பது தெரியவில்லை.

அவர்கள் இருவரும் காதல் விவகாரத்தில் மீட்கப்பட்டிருந்ததால் அதன் காரணமாக திட்டமிட்டு காப்பகத்தில் இருந்து தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரணாலயத்தில் இருந்து 2 சிறுவர்கள் தப்பினர். இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க சரணாலயம் போன்ற காப்பகங்களில் கூடுதல் கண்காணிப்பை ஏற்படுத்த போலீசார் திட்ட மிட்டுள்ளனர்.

Tags:    

Similar News