செய்திகள்

திருப்போரூர் அருகே 9-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை: வாலிபர் கைது

Published On 2017-07-24 11:45 IST   |   Update On 2017-07-24 11:46:00 IST
திருப்போரூர் அருகே 9-ம் வகுப்பு மாணவியை கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த ஆலத்தூரை சேர்ந்த 13 வயது சிறுமி பையனூரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று மாலை மாணவியின் தாய் மற்றும் அக்காள், அண்ணன் ஆகியோர் வெளியில் சென்றுவிட்டனர். வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்தாள்.

இரவு அவர்கள் திரும்பி வந்தபோது மாணவி கொடூரமாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது ஆடை அலங்கோலமாக கிடந்தது. அவரை கற்பழித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

இது குறித்து திரூப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சூப்பிரண்டு ஹதிமானி மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் ஓடி அதே பகுதியில் உள்ள அசோக்குமார் என்பவரது வீட்டில் நின்றது.

இதையடுத்து அசோக் குமாரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் மாணவியை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

அசோக்குமார் போலீசில் அளித்துள்ள வாக்கமூலத்தில் கூறி இருப்பதாவது:-

மாணவியின் குடும்பத்தில் உள்ளவர்களுடன் எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. எனவே எப்போது வேண்டுமானாலும் அவர்களது வீட்டுக்கு சென்று வருவேன். மாணவியிடம் பழகியபோது அவர் மீது எனக்கு ஆசை ஏற்பட்டது.

நேற்று மாலை மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து சென்றேன். மாணவியிடம் ஆசைக்கு இணங்குமாறு கூறியதால் அவள் என்னை கண்டித்தாள்.

இதையடுத்து மாணவியின் வாயில் துணியை திணித்து வலுக்கட்டாயமாக கற்பழித்தேன். பின்னர் அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்து தப்பிச் சென்றுவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கொலை நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய போது கறுப்பு கலர் டி-சர்ட் அணிந்த வாலிபர் சென்றுவந்ததை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

இதனை துருப்பு சீட்டாக வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். மோப்ப நாயும் அசோக்குமாரின் வீட்டில் நின்றதால் சந்தேகத்தின் பேரில் முதலில் அவரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் அப்போது கொலை செய்யவில்லை என அவர் கூறிவிட்டார்.

இது தொடர்பாக அசோக் குமாரின் நண்பர்களிடம் விசாரித்த போது ஒருவரது வீட்டுக்கு அவர் சென்று வந்ததும் அங்கு டி-சர்ட்டை கழற்றி வீசி சென்றதும் தெரிந்தது.

மேலும் மாணவியின் வீட்டு வாசலில் அசோக்குமாரின் செருப்பு கிடந்தது. கொலை செய்த பதட்டத்தில் அவர் செருப்பை விட்டுச்சென்றது தெரிந்தது. இதனை வைத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் மாணவியை கற்பழித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்போரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News