செய்திகள்
ரவுடி ஸ்ரீதர்

விசாரணைக்கு ஒத்துழைக்காததால் ரவுடி ஸ்ரீதரின் மகனை கைது செய்ய போலீஸ் முடிவு

Published On 2017-07-12 15:54 IST   |   Update On 2017-07-12 15:54:00 IST
ரவுடி ஸ்ரீதரின் மகன் விசாரணைக்கு ஒத்துழைக்காததால் சின்ன காஞ்சிபுரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். பிரபல சாராய வியாபாரியான இவர் கொலை, கொலை முயற்சி நில அபகரிப்பு என பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுபடி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள இவர் தற்போது துபாயில் இருந்து தப்பி இலங்கையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அமலாக்க துறையின் உதவியுடன் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள இவரது சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் இவர் மீதான போலீசின் பிடி இறுகியுள்ளது.

இவரது மகன் சந்தோஷ் குமார் (24) கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பாஸ்போட்டை புதுப்பிக்க லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சுற்றி வளைத்தனர்.

சென்னை அமலாக்க பிரிவினர் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு காஞ்சீபுரம் போலீசார் அவரை காஞ்சீபுரம் அழைத்து வந்து 15 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என விடுவிக்கப்பட்ட நிலையில் காஞ்சீபுரம் எல்லப்பன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் சந்தோஷ்குமாரை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்தனர்.

ஆனால் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காததால் சின்ன காஞ்சிபுரம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இன்று அவர் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News