செய்திகள்

சத்தியமங்கலத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு 1.5 டன் மல்லிகை பூக்கள் ஏற்றுமதி

Published On 2017-06-26 06:35 GMT   |   Update On 2017-06-26 06:35 GMT
ரமலான் பண்டிகையையொட்டி சத்தியமங்கலத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு 1.5 டன் மல்லிகை பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் வட்டாரத்தில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், சம்பங்கி பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

இங்கு விளையும் பூக்களை பறித்துச் சென்று சத்தியில் உள்ள பூக்கள் விற்பனை சங்கத்தில் விற்பனை செய்கின்றனர். இங்கு விற்கப்படும் முதல் தர மல்லிகைப்பூக்களை கொள்முதல் செய்து அதனை ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் பேக்கிங் செய்து அனுப்புகின்றனர்.

கோவையில் உள்ள வேன்கார்டு என்ற பூ ஏற்றுமதி நிறுவனம், சத்தியில் உயர்தரப் பூக்களை கொள்முதல் செய்து அதனை ஓரிடத்தில் கொட்டுகின்றனர். பூக்கள் மேலும் தரம் பிரிக்கப்பட்டு சாதாரண தண்ணீரில் நனைத்து அதன் இயற்கையாக பூக்களில் உள்ள வெப்பத்தை தணித்து அதில் உள்ள கழிவுகளை நீக்குகின்றனர்.

பின்னர், பூக்களை மாலை போல கட்டுவதற்கு தயார்படுத்துகின்றனர். இதற்கென பணிபுரியம் பெண்களுக்கு 200 கிராம் அளவில் விடு பூக்களை கொடுத்து அதனை 6 அடி நீளமுள் சரமாக கட்டுகின்றனர். சரவடிவில் உள்ள பூக்கள் மேலும் உதிராமல் உள்ளதா? என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரத்தை உறுதி படுத்துகின்றனர்.

தொடர்ந்து, ஏற்றுமதிக்கு ஏற்றவாறு மலர்களை குளிரூட்டுவதற்கு ஐஸ்ஜெல் என்ற பாக்கெட்டை பெட்டிக்குள் வைத்து பதப்படுத்துகின்றனர். சில இடங்களுக்கு விடுபூக்கள் விரும்புவதால் அதனையும் அதில் வைத்து பேக்கிக் செய்து வேன் மூலம் கொச்சின் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சவுதிஅரேபியாவில் உள்ள ரியாத், ஜெட்டா மற்றும் துபாய்க்கு அனுப்பப்படுகிறது.

ரமலான் பண்டிகையையொட்டி என்பதால் ஞாயிற்றுகிழமை 1.50 டன் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இன்று ரமலான் கொண்டாடப்படுவதால் பூக்களின் தேவை அதிகரிக்கும் என பூ விவசாயிகள் தெரிவித்தனர். ரமலான் பண்டிகையையொட்டி கிலோ ரூ.120க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது ரூ.900 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News