செய்திகள்

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: பணம் பட்டுவாடா செய்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்- ஈஸ்வரன்

Published On 2017-04-10 10:25 IST   |   Update On 2017-04-10 10:25:00 IST
எதிர்காலத்தில் பணம் பட்டுவாடா நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஈஸ்வரன் கூறியுள்ளார்.
ஈரோடு:

பணப்பட்டுவாடா நடை பெற்றது உறுதி செய்யப்பட்டதால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்வதாக அறிவித்தது.

இது குறித்து கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால் இந்திய தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்லை ரத்து செய்துள்ளது. இது ஓட்டு மொத்த தமிழகத்திற்கே தலைக்குனிவு.

உலக மக்களிடம் தமிழர்கள் என்றாலே பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடுவார்கள் என்ற நிலையை உருவாக்கி விடும்.

ஏற்கனவே இது போன்று அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலின் போது இதே காரணத்திற்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் அங்கு தேர்தல் நடந்தது. அப்போதும் பணம் பட்டுவாடா நடந்ததாக கூறப்படுகிறது.

தேர்தலை ரத்து செய்தால் மட்டும் இதற்கு தீர்வு கிடைக்க போவதில்லை. மீண்டும் தேர்தல் நடந்தால் இதே நிலை தான் நீடிக்கும். எனவே தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடா நடந்தால் அதை எப்படி தடுக்க போகிறோம் என்பதை திட்டமிட்டு செயல்படுத்தி அதை விளக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட வேட்பாளர் மீது நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இது குறித்து மக்களிடம் எழுச்சி இல்லை.

தமிழக விவசாயிகள் போராட்டம் தமிழக விவசாயிகளுக்காக மட்டும் இல்லை. இந்திய விவசாயிகள் சார்பாகவும் தான் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இளைஞர்களும், மாணவர்களும், பொது மக்களும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தினால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News