செய்திகள்

அமைச்சர்கள் பேச்சு வார்த்தை தோல்வி: நாகை மீனவர்கள் உண்ணாவிரதம் நீடிப்பு

Published On 2017-03-15 13:20 IST   |   Update On 2017-03-15 13:20:00 IST
அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் நாகை மாவட்ட மீனவர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது.
நாகப்பட்டினம்:

ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து நாகை தலைமை தபால் நிலையம் முன் நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன் கலெக்டர் பழனிச்சாமி, எம்.எல்.ஏ.க்கள் பவுன்ராஜ், தமிமுன் அன்சாரி ஆகியோர் வந்தனர்.

அப்போது அமைச்சர்களை மீனவ பெண்கள் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். படகுகளை பறிகொடுத்து மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை. விசைப்படகுகளை மீட்கும் வரை நாங்கள் போராட்டத்தை விலக்கி கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினர்.

தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.வுக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன் ஆட்சி காலத்தில் 343 விசைப்படகுகளை மீட்டு தந்தார்.18 விசைப்படகுகள் விடுவிக்க முடியாத அளவிற்கு முழு சேதம் அடைந்து விட்டது.

எனவே பாதிக்கப்பட்ட விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் இன்னும் 2 நாட்களுக்குள் வழங்கி விடுகிறோம்.

இலங்கை வசம் உள்ள 138 விசைப்படகுகளை மீட்க மத்திய அரசுக்கு முழு அழுத்தம் கொடுத்து மீட்பது தமிழக அரசின் கடமை. விசைப்படகுகளை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்கள் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து நாகை மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது. இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

மீனவர்களின் போராட்டத்துக்கு இளைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Similar News