செய்திகள்

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு: காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர் உள்பட 2 பேர் பலி

Published On 2017-03-06 08:57 IST   |   Update On 2017-03-06 08:57:00 IST
புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் மாட்டின் உரிமையாளர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள கவிநாடு கண்மாயில் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று, கடந்த சில நாட்களாக வாடிவாசல் அமைப்பது, பாதுகாப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர்.

இந்த ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 517 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. மாடுகளை பிடிக்க 500 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக காளைகளை லாரிகள், டிராக்டர், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் புதுக்கோட்டை கவிநாடு கண்மாய்க்கு கொண்டு வந்தனர். அவ்வாறு கொண்டு வரப்பட்ட அனைத்து காளைகளையும் கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் 9 காளைகளுக்கு தகுதி இல்லை எனக்கூறி, அவை ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து காலை 8.30 மணியளவில் ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ், போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில காளைகள் வீரர்களை கொம்பால் முட்டி பந்தாடின. ஒரு காளை வாடிவாசல் அருகே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு கட்டையை முட்டி தூக்கியபடி வெளியே ஓடியது.

வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்படும் காளைகள் வெளியேறும் வழியில், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சில காளைகள் வெளியேறாமல் மீண்டும் வாடிவாசலுக்கு திரும்பி வந்தன. இதைத்தொடர்ந்து விழா கமிட்டியினர் மற்றும் போலீசார் ஒரு சரக்கு ஆட்டோவில் வந்து மாடுகளை வெளியேற்றினார்கள். இதேபோன்று பலமுறை நடைபெற்றதால், அவ்வப்போது சிறிது நேரம் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு, மீண்டும் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் வேடிக்கை பார்த்தவர்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் உள்பட 71 பேர் காயமடைந்தனர். இதில் மாட்டை அவிழ்த்து விட்டு வாடிவாசலில் இருந்து வெளியே வந்த ஒரு மாட்டின் உரிமையாளரான அன்னவாசல் எல்லப்பட்டி பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமியை (வயது 50) காளை முட்டி தூக்கி வீசியதில் பலத்த காயமடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வேன் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்க வந்த புதுக்கோட்டை காமராஜபுரம் 20-ம் வீதியை சேர்ந்த சையது இப்ராகிம் மகன் வாசீம்அக்ரம்(20) மாடு முட்டியதில் இறந்தார்.

மேலும் ஜல்லிக்கட்டில் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அறந்தாங்கி பகுதியை சேர்ந்த முத்து மகன் வீரராகவன் (20), நமணசமுத்திரம் பகுதியை சேர்ந்த துரை மகன் அலெக்ஸ் (17), மேலக்காயம்பட்டி பகுதியை சேர்ந்த ராமையா மகன் செந்தில்குமார் (34) ஆகிய 3 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் கட்டில், குத்துவிளக்கு, சில்வர் குடம், மின்விசிறி, ரொக்கப்பணம் உள்பட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டை காண்பதற்காக புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் லாரிகள், சரக்கு ஆட்டோக்கள், டிராக்டர்கள் போன்றவற்றில் வந்திருந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தில் ஒரு தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வேன்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மதியம் 1.30 மணியவில் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

Similar News