செய்திகள்
எழிலரசி

வி.எம்.சி.சிவக்குமார் கொலையில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை: நீதிபதியிடம் எழிலரசி வாக்குமூலம்

Published On 2017-01-26 04:40 GMT   |   Update On 2017-01-26 04:40 GMT
புதுவை முன்னாள் சபாநாயகர் வி.எம்.சி.சிவக்குமார் கொலையில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நீதிபதியிடம் எழிலரசி வாக்குமூலம் அளித்துள்ளார்.
காரைக்கால்:

புதுவை மாநிலம் காரைக்கால் திருப்பட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார் கடந்த 3-ந் தேதி கூலிப்படையினரால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கு தொடர்பாக நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

சாராய வியாபாரி ராமு கொலைக்கு பழிவாங்கும் வகையில் ராமுவின் 2-வது மனைவி எழிலரசி தமிழ்நாட்டைச் சேர்ந்த கூலிப்படையினரை ஏவி வி.எம்.சி.சிவக்குமாரை தீர்த்துக்கட்டியிருக்கலாம் என சந்தேகித்தனர்.

இதைத்தொடர்ந்து எழிலரசியை பல்வேறு இடங்களில் தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசாரின் பிடியில் சிக்காத எழிலரசி கடந்த 23-ந் தேதி புதுவை 2-வது குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி தனலட்சுமி முன்பு சரணடைந்தார். அவரை புதுவை காலாப்பட்டில் உள்ள சிறையில் அடைத் தனர்.

பின்னர் காரைக்கால் கோர்ட்டில் நீதிபதி பிரபு முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது எழிலரசியை அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

காரைக்காலில் பெண்களுக்கு தனியாக சிறை இல்லாததால் எழிலரசி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழிலரசியை அழைத்துச் சென்று மீண்டும் காரைக்கால் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் எழிலரசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வருகிற 28-ந்தேதி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

எழிலரசி ஆஜர்படுத்தப்பட்டபோது அவர், ‘வி.எம்.சி.சிவக்குமார் கொலையில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. போலீசுக்கு பயந்தே கோர்ட்டில் சரணடைந்தேன்’ என்று நீதிபதியிடம் கூறினார்.

அதைத்தொடர்ந்து போலீசார் எழிலரசியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிரவி போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் இன்று முதல் தீவிர விசாரணை நடைபெற உள்ளது.

Similar News