செய்திகள்
கைதான ஜானகி மற்றும் லெட்சுமியை படத்தில் காணலாம்.

நெல்லை அருகே மீன்வியாபாரி மனைவியிடம் 110 பவுன் நகை மோசடி: பெண்கள் கைது

Published On 2017-01-17 10:10 GMT   |   Update On 2017-01-17 10:10 GMT
நெல்லை அருகே புதையல் எடுத்து தருவதாக கூறி மீன்வியாபாரி மனைவியிடம் 110 பவுன் நகை மோசடியில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. இவர் மீன் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சுதா (வயது 36). இவர்களது வீட்டில் இடிந்தகரை வடக்குத்தெருவை சேர்ந்த ஜானகி (38) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சுதாவின் வீட்டில் கோடிக்கணக்கான மதிப்புள்ள புதையல் இருப்பதாக அவரிடம் ஜானகி கூறியுள்ளார். அந்த புதையலை எடுக்க வேண்டும் என்றால் தொடர்ந்து பூஜைகள் நடத்த வேண்டும் என்றும் கூறினாராம்.

இதையடுத்து சுதாவின் வீட்டில் ஒரு சாமி படத்தை மாட்டி ஜானகி பூஜை செய்துள்ளார். அப்போது பூஜை நடத்தும் செலவிற்காக சுதாவின் நகைகளை அவர் வாங்கியுள்ளார். இப்படி கடந்த 2 வருடங்களாக புதையல் எடுக்க பூஜை செய்வதாக கூறி சுதாவிடம் இருந்து 110 பவுன் தங்க நகைகளை ஜானகி வாங்கினாராம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் கண்ணா வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் நகைகள் இல்லாததை கண்டு திடுக்கிட்டார். உடனே இது குறித்து மனைவி சுதாவிடம் கேட்டுள்ளார். திடீரென நகைகள் குறித்து கணவர் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த சுதா மயங்கி விழுந்து விட்டாராம்.

உடனே அவரை தண்ணீர் தெளித்து மயக்கத்தை தெளிய செய்த ராஜேஷ் கண்ணா நகைகள் எங்கே? என கேட்டுள்ளார். அப்போது நகைகள் அனைத்தையும் ஜானகியிடம் கொடுத்த விவரத்தை அவர் கூறியுள்ளார். இதையடுத்து ராஜேஷ் கண்ணா கூடங்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜானகியிடம் விசாரணை நடத்தினர். அப்போது சுதா வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள புதையல் இருப்பதாக கூறி அவரிடம் இருந்து மோசடியாக நகைகளை பெற்றதாகவும், அந்த நகைகளை தனது கணவரின் தங்கை லட்சுமியிடம் கொடுத்து தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து ஜானகியையும், லெட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Similar News