செய்திகள்

விருத்தாசலம் அருகே கிராம மக்கள் 40 பேருக்கு திடீர் வாந்தி - மயக்கம்

Published On 2016-12-07 11:24 GMT   |   Update On 2016-12-07 11:24 GMT
விருத்தாசலம் அருகே கிராம மக்கள் 40 பேருக்கு திடீரென வாந்தி - மயக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது எடையூர் கிராமம். இந்த கிராமத்தில் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தமாக இல்லை. எனவே சுத்தம் செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை புகார் செய்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையில் எடையூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 40), ராஜமாணிக்கம் (45), சங்கீதா (28), அஞ்சலை (50), பத்மாவதி (35) உள்ளிட்ட 40-பேர்களுக்கு இன்று காலை திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

உடனடியாக அவர்களை விருத்தாசலம், வேப்பூர், பெண்ணாடம் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தகவல் அறிந்த சுகாதாரதுறை அதிகாரிகள், மருத்துவ குழுவினர் எடையூர் பகுதியில் முகாமிட்டு மற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார்கள். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்ததால் கிராம மக்களுக்கு வாந்திபேதி ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறும்போது, சுகாதாரமற்ற குடிநீர் பிரச்சினையால்தான் வாந்தி, பேதி ஏற்பட்டது என்றனர்.

Similar News