செய்திகள்

மழையையும் பொருட்படுத்தாமல் ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க காத்து நின்ற பொதுமக்கள்

Published On 2016-12-07 11:14 GMT   |   Update On 2016-12-07 11:14 GMT
கடலூரில் இன்று காலை மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் குடைபிடித்தபடி நீண்ட வரிசையில் வங்கிகள் மற்றும் ஏ.டிஎம். மையங்கள் முன்பு நீண்டநேரம் காத்து நின்று பணம் எடுத்துச் சென்றனர்.
கடலூர்:

கருப்பு பணம், ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8-ந் தேதி அறிவித்தது. போதுமான அளவு புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வராததால் கடந்த 1 மாதமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 192 வங்கிகளும், 300-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களும் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் பெரும்பாலானவை இன்று செயல்படவில்லை. குறைவான எண்ணிக்கையிலேயே செயல்பட்டன.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி நேற்று வங்கிகள் செயல்படவில்லை. ஏ.டி.எம்.களிலும் பணம் நிரப்பப்படாததால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் தவித்தனர். இன்று காலை பணம் எடுப்பதற்காக வங்கிகள் திறக்கும் முன்னரே பொதுமக்கள் கடலூரில் உள்ள வங்கிகள் முன்பு நீண்ட வரிசையில் காத்து நின்றதை காணமுடிந்தது. இதேபோல் ஏ.டி.எம். மையங்கள் முன்பும் பொது மக்கள் கூட்டம் அலைமோதியது.

காலை 10.30 மணியளவில் கடலூரில் இன்று மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது பொதுமக்கள் குடைபிடித்தபடி நீண்ட வரிசையில் வங்கிகள் மற்றும் ஏ.டிஎம். மையங்கள் முன்பு நீண்டநேரம் காத்து நின்று பணம் எடுத்துச் சென்றனர்.

திறந்திருந்த சில ஏ.டி.எம்.களிலும் விரைவில் பணம் தீர்ந்துவிட்டதால் வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை பார்க்க முடிந்தது.

Similar News