செய்திகள்

கடலூர் அருகே குடிநீர் தொட்டியில் ஆண் பிணம்: போலீசார் விசாரணை

Published On 2016-11-25 12:50 GMT   |   Update On 2016-11-25 12:51 GMT
கடலூர் அருகே குடிநீர் தொட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர்:

கடலூரை அடுத்துள்ளது பெரியகங்கணாங்குப்பம். இங்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதில் இருந்து அந்த பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வீடுகளில் பொதுமக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த தண்ணீரில் அதிகளவு துர்நாற்றம் வீசியது.

சந்தேகம் அடைந்த பொதுமக்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ள இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்களில் சிலர் தொட்டியின் மேல் ஏறி பார்த்தனர்.

அப்போது தொட்டிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் மிதந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே ரெட்டிச்சாவடி போலீசுக்கும், கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் பிணத்தை மீட்டு கீழே கொண்டு வந்தனர்.

பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து பிணத்தை தண்ணீர் தொட்டிக்குள் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், குடிநீர் தொட்டி மூலம் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.

மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால் உத்தரவின் பேரில் டாக்டர்கள் குடி நீரை பருகிய அந்த பகுதி மக்களுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

குடிநீர் விநியோகம் செய்யும் தொட்டியில் பிணம் கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News