பணம் வராததால் ஏ.டி.எம். எந்திரத்துக்கு மாலை அணிவித்து சங்கு ஊதி போராட்டம்
விருத்தாசலம்:
விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள இந்தியன் வங்கி முன்பு தனி கட்டிடத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 3 நாட்களாக இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வரவில்லை.
பணம் எடுப்பதற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணம் உள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் வைக்கப்படாததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாற்றுத்திறானிகள் சங்கத்தினர் இன்று காலை அந்த இடத்தில் திரண்டனர்.
அவர்கள் ஏ.டி.எம். எந்திரம் செயல்படாமல் உள்ளது என்று கோஷம் எழுப்பியவாறே அந்த எந்திரத்துக்கு ஆள் உயர மாலை அணிவித்து, சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டச் செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்து விருத்தாசலம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.