செய்திகள்

சட்டமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாதிரி கூட்டம் நடத்தினோம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

Published On 2016-08-21 08:58 IST   |   Update On 2016-08-21 08:58:00 IST
சட்டமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாதிரி கூட்டம் நடத்தினோம் என மு.க.ஸ்டாலின் கூறினார்.
ஆலந்தூர்:

தி.மு.க. பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு சென்றார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- சட்டசபையில் போட்டி கூட்டம் நடத்துவதால் மக்களுக்கு என்ன பயன்?

பதில்:- நாங்கள் போட்டி கூட்டம் நடத்தவில்லை. மாதிரி கூட்டம், சட்டமன்றம் எப்படி நடக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற வகையில் மாதிரி கூட்டம் நடத்தினோம்.

கேள்வி:- மக்கள் நல்வாழ்வு மானிய விவாதம் முடிந்துவிட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 4 குழந்தைகள் இறந்துவிட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு ஒன்றியத்தில் 4 குழந்தைகள் இறந்து உள்ளதாக செய்திகள் வந்து உள்ளது. அதில் 25 பேர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. குடிநீரில் கழிவுநீர் கலந்துவிட்டதாக சொல்கிறார்கள். எனவே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற கூட்டத் தொடரில் நாங்கள் கலந்துகொண்டு இருந்தால் இதுபற்றி பேசி இருப்போம்.

கேள்வி:- மாதிரி கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுமா?

பதில்:- நீங்கள் வந்து பாருங்கள் தெரியும்.

கேள்வி:- போலீஸ் மானிய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லையே?

பதில்:- கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே இதை செய்து உள்ளனர்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Similar News