செய்திகள்

வண்டலூர் பூங்காவில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தன

Published On 2016-07-24 07:29 IST   |   Update On 2016-07-24 07:29:00 IST
சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தன.
வண்டலூர்:

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சுகள் பொரித்தன.

வண்டலூர் பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் 6 வகையான ஆமை இனங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் சிவப்புக்காது ஆமை, இந்திய புள்ளி ஆமை, மற்றும் இந்திய குளத்தாமை ஆகியவை முட்டையிட்டு குஞ்சு பொரித்துள்ளன. சிவப்புக்காது ஆமை 10 குஞ்சுகளும், இந்திய புள்ளி ஆமை 9 குஞ்சுகளும், இந்திய குளத்தாமை 1 குஞ்சும் பொரித்துள்ளன. இதன் மூலம் 20 ஆமை குஞ்சுகள் வெளிவந்துள்ளன.

இந்த பூங்கா ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஆமைகள் பராமரிக்கப்பட்டு வந்தாலும், குஞ்சுகள் பொரிப்பது இதுவே முதல் முறையாகும். புதிய வரவுகளுடன் பூங்காவிலுள்ள ஆமைகளின் எண்ணிக்கை 101- ஆக உயர்ந்துள்ளது.

சுற்றுச்சூழலை வளமைப் படுத்தும் பணிகளின் கீழ் ஆமைகளின் அடைப்பிடங்கள் அனைத்தும் ஒரு அடி உயரத்திற்கு மணல் கொண்டு நிரப்பப்பட்டது. இதனால் ஆமைகள் குழி தோண்டி முட்டையிடுவதற்கு ஏதுவான சூழல் ஏற்பட்டது. மேலும் கள்ளி, பிரண்டை வகைச்செடிகள் அடைப்பிடங்களில் நடவு செய்யப்பட்டதுடன், கீரை வகைகளும் உணவில் அதிகம் சேர்க்கப்பட்டது. நீர் நில வாழ்வியலுக்கு தகுந்தவாறு அடைப்பிடங்களில் உள்ள குட்டைகள் மறு வடிவமைக்கப்படுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆமைகளின் இயற்கையான வாழ்விடத்தை ஒத்தவாறு அடைப்பிடங்கள் உருவாக்கப்பட்டதால் இயற்கை தூண்டுதல் ஏற்பட்டு ஆமைகள் இனப்பெருக்க நடவடிக்கையை தொடங்கின.

நீர்நிலைகள் அழிப்பு மற்றும் மாசுபடுதல், கடற்கரைகள் ஆக்கிரமிப்பு, ஆறு மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய மணற்திட்டு அழிப்பு, முட்டைகள் சேகரம், வேட்டை, மீன்பிடி வலைகளில் சிக்கிக்கொள்ளுதல், கடற்கரையில் இரவு நேரங்களில் விளக்கு எரியவிடுதல் போன்ற காரணங்களால் ஆமை இனங்கள் அழிவுக்குள்ளாகி வருகின்றன. வனஉயிரின பாதுகாப்பு சட்டம், 1972-ன்படி ஆமை இனங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News