செய்திகள்

புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க. நிர்வாகியின் கார் டிரைவர் மர்ம சாவு: பதற்றம்-போலீஸ் குவிப்பு

Published On 2016-06-05 12:11 IST   |   Update On 2016-06-05 12:11:00 IST
புதுக்கோட்டை அருகே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளரின் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சம்பட்டிவிடுதி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 24). இவர் கறம்பக்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சரவணனிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு தரப்பினருடன் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து அய்யப்பன் வேலையில் இருந்து நின்றுவிட்டார். அதன்பிறகு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற அய்யப்பன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை சம்பட்டிவிடுதியில் உள்ள சரவணனுக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் அய்யப்பன் பிணமாக மிதந்தார். இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

பின்னர் கிணற்றில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அய்யப்பன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அவரது உடலில் காயங்கள் உள்ளதால் அவரது சாவில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையில் மர்மநபர்கள் அவரை அடித்துக்கொன்று கிணற்றில் வீசினரா? அல்லது காதல் தோல்வி காரணமாக அய்யப்பன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யப்பன் மர்மமான முறையில் இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் சரவணன் தோட்டத்து முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை சப்-கலெக்டர் அம்ரித் மற்றும் அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அங்கு பதற்றம் நிலவி வருவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News