செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதிப்பா?: பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் - விவசாயிகள் அறிவிப்பு

Published On 2016-05-09 11:30 IST   |   Update On 2016-05-09 12:54:00 IST
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்படுவதால் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று காட்டுமன்னார் கோவில் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சியினர் தங்களது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு இருப்பது வரவேற்கதக்கதாகும்.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் 22 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரை நம்பியுள்ளது, மேலும் சென்னை உள்பட 7 மாநகராட்சிகள், 25 மாவட்டங்களில் வாழக்கூடிய மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

ஆனால் கர்நாடக அரசு தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் விடக்கூடாது என்று கூறி ஏற்கனவே 6 தடுப்பணைகளை அங்கு கட்டிவிட்டது.

தற்போது தமிழகத்துக்கு வரக்கூடிய உபரிநீரையும் தடுக்க மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே 60 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய தடுப்பணை கட்ட வேண்டும் என்று அங்குள்ள நீர்பாசனத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி கர்நாடக அரசுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறார்.

எனவே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவும், பிரதமர் கர்நாடகத்துக்கு சாதகமாக இருப்பதை கண்டித்தும், விவசாயிகள், மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடவும், வருகிற 11–ந்தேதி வேதாரண்யத்துக்கு பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பது. இதில் காட்டுமன்னார் கோவிலில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ளவது. மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Similar News