செய்திகள்

அ.தி.மு.க.வினர் என் கொடும்பாவியை எரிப்பதை பற்றி கவலைப்படவில்லை: இளங்கோவன் பேட்டி

Published On 2016-04-27 13:48 IST   |   Update On 2016-04-27 13:49:00 IST
அ.தி.மு.க.வினர் என் கொடும்பாவியை எரிப்பதை பற்றி கவலைப்படவில்லை என்று விமான நிலையத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லியில் இருந்து விமானம் மூலம் நள்ளிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்க பதுக்கி வைத்திருக்கிறார்கள். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

ஆளும் கட்சியினர் பதுக்கி வைத்துள்ள பணத்தை கைப்பற்ற வெளி மாநில போலீசாரை ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும்.

தேர்தலில் வைகோ போட்டியிடுவதும், போட்டியிடாததும் அவரது தனிப்பட்ட விஷயம். அதை அவரிடம் கேட்க வேண்டும். அதற்காக தி.மு.க. மீது பழி போடுவது தவறு. முதல்-அமைச்சரை பற்றி கூறிய கருத்துக்காக அ.தி.மு.க.வினர் என் கொடும்பாவியை எரிக்கிறார்கள். எரிக்கட்டும். அதை பற்றி நான் கவலைப்படவில்லை.

என்னைப்பற்றி பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறிய கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News