செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.37 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2016-04-21 08:01 IST   |   Update On 2016-04-21 08:01:00 IST
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு கடத்த முயன்ற ரூ.37 லட்சம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர் :

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு செல்லும் விமானத்தில் பெரும் அளவில் ஹவாலா பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை சென்னையில் இருந்து கொழும்புக்கு செல்ல இருந்த விமானத்தில் ஏற வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த கோபால்(வயது 36), சத்யராஜ்(34) ஆகியோர் கொழும்புக்கு செல்ல வந்திருந்தனர்.

அவர்களது உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் அவர்களது சூட்கேசில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் மற்றும் யூரோ நாட்டு கரன்சிகள் இருந்தன. அவர்களிடம் இருந்து ரூ.37 லட்சம் மதிப்பு உள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கோபால், சத்யராஜ் ஆகியோரது விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், இது தொடர்பாக அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் கணக்கில் வராத இந்த பணத்தை எதற்காக கொழும்புக்கு கடத்திச் செல்ல முயன்றனர். அது ஹவாலா பணமா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Similar News